‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுமாகும் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய்.
தமிழ்நாட்டிற்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவருடைய அம்மா யசோதரா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். காங்கேயம் ராஜ்குமார் மன்றாடியார் சகோதரி.
அதைவிடவும் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு என்று அவர் செய்த சமூக சேவை விஷயத்தைச் சொல்லலாம். 2005ம் ஆண்டு சுனாமி வந்த போது கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகளைக் கட்டி உதவி செய்தவர்.
தமிழ் ஹீரோக்கள் செய்ய மறந்த உதவியை மும்பையிலிருந்து வந்து செய்து கொடுத்த ஹிந்தி ஹீரோ, நிஜமாகவே ஹீரோ.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் விவேக் கலந்து கொண்ட போது, விழா அரங்கிலிருந்து யாரோ ஒரு இளைஞர் விவேக்கைப் பார்த்து பேச வேண்டும் என குரல் எழுப்பியிருக்கிறார். பாதுகாவலர்கள் அவரைத் தடுத்த போது, விவேக் அவரை மேடைக்கு வரச் சொல்லியிருக்கிறார். அப்போது பேசிய அந்த இளைஞர், தான் கடலூரைச் சேர்ந்தவர் என்றும், விவேக் கட்டிக் கொடுத்த வீட்டினால்தான் அவரால் நிம்மதியாகப் படித்து வளர முடிந்தது என்று சொல்லி அழுதிருக்கிறார். அதைக் கேட்ட விவேக்கும் கண் கலங்கியிருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள் விவேக் ஓபராய் நிஜமான ஹீரோவா இல்லையா என்று…
‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழுக்கு வருவது மிக்க மகிழ்ச்சி என்கிறார் விவேக்.
“இப்படத்திற்காக இயக்குனர் சிவா என்னை சந்தித்து கதை சொன்ன பதினைந்தாவது நிமிடத்தில் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். சினிமா மீது அவருக்குள்ள காதல், ஆர்வம் அந்த பதினைந்து நிமிடங்களுக்குள் எனக்குப் புரிந்துவிட்டது.
‘விவேகம்’ படத்தில் நடிப்பதற்கு முன்பு சிவா இயக்கிய படங்களைப் பார்த்ததில்லை. அதன் பின்புதான் ‘வீரம், வேதாளம்’ ஆகிய படங்களைப் பார்த்தேன்.
இப்படத்தின் அஜித் அண்ணாவுடன் இணைந்து நடித்தது அவ்வளவு சிறப்பானது. அவரைப் போன்ற அதிக ஈடுபாடு கொண்ட ஒருவரை நான் பார்த்ததில்லை. பல்கேரியாவில் மைனஸ் 17 டிகிரி குளிரில் கூட சட்டை இல்லாமல் நடித்தார். நான் இரண்டு மூன்று ஆடைகள் அணிந்திருந்தும் குளிரில் நடுங்கினேன்.
படப்பிடிப்பில் அவரே அனைவருக்கும் டீ ஊற்றிக் கொடுக்கும் வேலைகளைச் செய்வார். எனது உதவியாளர் முதற் கொண்டு அனைவருக்கும் கொடுப்பார். அவ்வளவு பெரிய ஹீரோ இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என எனது உதவியாளரே என்னிடம் அஜித் அண்ணாவைப் பற்றி நெகிழ்ந்து பேசுவார்.
‘வேதாளம்’ படத்தில் மிகவும் குண்டாக இருந்தேன். ‘விவேகம்’ படத்திற்காக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி அவ்வளவு உடற்பயிற்சி செய்வார். நான் விடியற்காலை 5 மணிக்கு கடும் குளிரில் ஓட்டலில் உள்ள ஜிம்முக்குச் செல்வேன். ஆனால், எனக்கு மன்னால் 4 மணிக்கே வந்து பயிற்சி செய்து கொண்டிருப்பார் அஜித் அண்ணா. அவ்வளவு டெடிகேஷனுடன் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
என்னுடைய கதாபாத்திரமும் படத்தில் சிறப்பான ஒன்று. அது பற்றி சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும். ஒரு படத்தின் கதையையும், கதாபாத்திரத்தையும் வெளியீட்டிற்கு முன்பே சொல்லி சஸ்பென்சை உடைத்துவிடக் கூடாது.
‘விவேகம்’ படத்தை ஹாலிவுட் படம் என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இப்படத்தை இன்டர்நேஷனல் தமிழ்ப் படம் என்றுதான் சொல்ல வேண்டும்,” என்றார் விவேக் ஓபராய்.
ஹிந்தித் திரையுலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த விவேக் ஓபராய் நல்ல கதாபாத்திரங்கள் தேடி வந்தால் தொடர்ந்து தமிழிலும் நடிப்பேன் என்கிறார்.
