அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடித்த ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 24ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் சுமார் 3000 தியேட்டர்களில் வெளியானது.
படம் வெளியான முதல் காட்சிக்குப் பிறகு படம் பற்றிய விமர்சனங்கள் படத்தைக் கிண்டலடித்தே அதிகம் வெளியாகின. ரசிகர்களை இயக்குனர் சிவாவும், அஜித்தும் ஏமாற்றிவிட்டார்கள் என்பது பலருடைய விமர்சனங்களில் இடம் பெற்றிருந்தது.
இருந்தாலும் அஜித் தமிழ்த் திரையுலகின் ஓபனிங் ஸ்டார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
விமர்சனங்களையும் மீறி இந்தப் படம் மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக நேற்று இரவு முதல் செய்திகள் பரவி வருகின்றன.
இந்த மூன்று நாட்களில் சராசரியாக 30 முதல் 35 கோடி ரூபாய் வசூலித்து, மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
சென்னையில் மட்டும் ‘விவேகம்’ படம் மூன்று நாட்களில் 4.24 கோடி வசூலித்திருப்பதாகப் படத்தின் இயக்குனர் சிவா அவருடைய ரிடிவீட்டில் தெரிவித்துள்ளார்.
படத்தின் மூன்று நாள் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் ரசிகர்களே படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டிவிட்டதாக டிவிட்டரில் டிரென்டிங் செய்து வருகிறார்கள்.