விடிவி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஜி.எல் சேதுராமன் இயக்கத்தில் எஸ்டிஆர் இசையமைப்பில் சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், தனக்கு சிம்பு காட் ஃபாதர் மாதிரி என்றார்.
“சக்க போடு போடு ராஜா இந்த அளவுக்கு ஒரு மாஸ் ஆ நிக்கிறதுக்கு ஒரு முக்கிய காரணம் என்னுடைய நண்பர் சிம்பு அவர்கள். அவர் இல்லனா, உண்மையிலயே இப்ப நான் இந்தப் படத்துல இல்லை.
அவருக்கு நன்றின்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லவே முடியாது. ஏன்னா, சிம்புவை இந்தப் படத்துக்கு மியுசிக் பண்ண சொல்லி கேக்கலாமேன்னு தயாரிப்பாளர் விடிவி கணேஷ் சொன்னாரு. ஆனால், நான், ‘அவர் ஒரு ஹீரோ, அவர் வந்து மியூசிக் பண்ணுவாருன்னு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், விடிவி எனக்காக அவர் பண்ணுவாருன்னு சொன்னாரு.
சிம்பு என் மேல அன்பு வச்சிருக்காருன்னு தெரியும், ஆனால், என் மேல இவளோ அன்பு வச்சிருக்காரான்னு நினைச்சிக் கூடப் பார்க்கலை. போய் கேட்ட உடனே, என்ன இருக்கு, நான் பண்றன்னு சொன்னாரு. ராப் பகலா உட்கார்ந்து எல்லா பாடல்களையும் போட்டுக் கொடுத்தாரு. நேத்து நைட்டு கூட இந்த டிரைலருக்காக உட்கார்ந்து கரெக்ஷன் சொல்லிட்டிருந்தாரு.
சிம்புவைப் பத்தி வெளியில பல பேருக்கு, பலதரப்பட்ட விஷயத்துல கோவம் இருக்கலாம். அதைப் பத்தியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் எனக்கு ‘காட் ஃபாதர்’ மாதிரி…சிம்பு வந்து எனக்கு எல்லா விதத்துலயுமே எல்லா நேரத்துலயுமே எனக்கு பக்கபலமா இருந்திருக்காரு.
அவருக்கு நன்றின்னு ஒரு வார்த்தை போதாது, கடைசி வரைக்கும் அவருக்கு உண்மை உள்ளவனா இருப்பேன்,” என சந்தானம் சிம்புவைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சேதுராமன், தயாரிப்பாளர் விடிவி கணேஷ், நடிகர்கள் விவேக், மயில்சாமி, நடிகை வைபவி சாண்டில்யா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
நடிகர் ஆர்யா, இயக்குனர் ராஜேஷ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.
‘சக்க போடு போடு ராஜா’ நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.