களத்தூர் கிராமம் விமர்சனம்

தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதைகள் வருவது வெகுவாகக் குறைந்து வருகிறது. அப்படியே ஒன்றிரண்டு கிராமத்துக் கதைகள் வந்தாலும், அவை காதலையும், நகைச்சுவையையும் மட்டுமே மையமாக வைத்து வருகின்றன.

கிராமத்து மக்களின் விதவிதமான வாழ்க்கை முறைகளை, வாழ்வியலைப் பதிவு செய்யும் படங்கள் அபூர்வமாகத்தான் வருகின்றன. அப்படி ஒரு அபூர்வமான கிராமத்தின் கதைதான் இந்த ‘களத்தூர் கிராமம்’.

தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் இருக்கும் கிராமம் களத்தூர் கிராமம். அங்குள்ள மக்களுக்கு களவுத் தொழில், அதாவது திருடுவதுதான் தொழில். அந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தலைவராக இருக்கிறார் கிஷோர். செய்வது திருட்டுத் தொழிலாக இருந்தாலும் நியாய தர்மத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கிறார். அவருடைய நெருங்கிய நண்பன் சுலில் குமார், பெண் மோகம் கொண்டவர். சுலில் குமாருக்குப் பெண் கொடுக்க பக்கத்து கிராமத்தில் ஒரு குடும்பம் நிச்சயம் வரை செல்கிறது. ஆனால், அந்த சமயத்தில் கிஷோர் அங்கு செல்லாததால் திருமண நிச்சயம் நின்று போகிறது. அந்த சமயத்தில் கிஷோர், யக்னாவைத் திருமணம் செய்து வந்து நிற்கிறார்.

கிஷோர், யக்னா திருமணம் ஊராருக்குத் தெரிய வருவதற்கு முன்பு கிஷோர் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். தனது திருமணம் நின்று போக கிஷோர் தான் காரணம் என நினைக்கும், சுலில், யக்னாவை ஊருக்குள் தன் மனைவி என அறிமுகப்படுத்துகிறார். ஜாமீனில் வெளிவரும் கிஷோர், சுலீலுடன் நடக்கும்ச ண்டையில் அவரைக் கொலை செய்து விடுகிறார். கிஷோர், யக்னாவுக்குப் பிறக்கும் மகனை சுலீல் பெற்றோரிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கிறார் கிஷோர். ஆனால், அவர்களோ, அந்தக் குழந்தையை தங்கள் மகனுக்குப் பிறந்தவன் என நினைத்து கிஷோருக்கு எதிரியாகவே வளர்க்கிறார்கள்.

பல வருடங்கள் கழித்து பரோலில் வரும் கிஷோரைக் கொலை செய்ய அவரது சொந்த மகனே அது அப்பாதான் எனத் தெரியாமல் எதிர்த்து நிற்கிறான். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் சரண் அத்வைதன் ஒரு மாறுபட்ட கிராமத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். கதையும், காட்சிகளும், கதாபாத்திரங்களும் அவ்வளவு யதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளன.

களத்தூர் கிராமத்தின் தலைவராக கிஷோர். இளமையான தோற்றம், வயதான தோற்றம் இரண்டிலுமே வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் அவருடைய நடிப்பிற்கு அவருடைய குரல் மேலும் வலு சேர்க்கிறது. எந்த ஒரு காட்சியிலுமே மிகையான நடிப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

கிஷோரின் நண்பராக சுலில் குமார். அவருடைய கதாபாத்திரத்தின் குணத்தை அவருடைய தெனாவெட்டான பார்வையே வெளிப்படுத்தி விடுகிறது. கிஷோரின் மனைவி என்று தெரிந்தும் யக்னா மீது ஆசைப்படுவது வில்லத்தனத்தின் உச்சம்.

யக்னா ஷெட்டி, கிஷோரின் மனைவியாக நடித்திருக்கிறார். ஒரு கனமான கதாபாத்திரத்தை லாவகமாகக் கையாண்டு நடித்திருக்கிறார். படம் முழுவதும் கிராமணத்துப் பெண்ணாகவே மாறிவிட்டார்.

சலீல் குமார் பெற்றோர்களாக நடித்திருக்கும் ‘நானும் ரௌடிதான்’ ராகுல் தாத்தாவும், அந்தப் பாட்டியும் அசத்தியிருக்கிறார்கள். விசாரணை கமிஷன் நீதிபதியாக நடித்திருக்கும் அஜத் ரத்தினத்தின் நடிப்பும் நிறைவு.

இப்படிப்பட்ட படத்திற்கு இளையராஜாவின் இசையைத் தவிர வேறு யாருடைய இசை சிறப்பாக அமைந்திட முடியும்.

வழக்கமான கிராமத்து நகைச்சுவை, சிரிக்க வைக்கும் காட்சிகள் என எதுவும் இல்லாமல் படம் முழுவதும் சீரியசாக நகர்வது மட்டுமே குறையாகத் தெரிகிறது. மற்றபடி படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் ஒரு கிராமத்தில் வசித்துவிட்டு வெளியில் வருவது போன்ற உணர்வே ஏற்படும்.

இப்படிப்பட்ட யதார்த்தமான பதிவுகளை நாமும் கொண்டாட வேண்டும் என்பதே தமிழ் சினிமாவுக்குச் செய்யும் பெருமை.

Read Previous

தீரன் அதிகாரம் ஒன்று – செவத்த புள்ள – பாடல் புரோமோ

Read Next

விழித்திரு – டி. ராஜேந்தர் பாடி ஆடும் ‘பப்பரப்பா’ பாடல் வீடியோ