தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம்

காக்கி சட்டை அணிந்து கொண்டு கேமராவைப் பார்த்து ஆவேசமாக வசனம் பேசும் ஹீரோவின் போலீஸ் கதைகளைப் பார்த்து சலித்துப் போனவரா நீங்கள். இந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைப் போய்ப் பாருங்கள், நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள்.

போலீஸ் கதைகளில் இருக்கும் எந்த விதமான வழக்கமான காட்சிகளும் இந்தப் படத்தில் இல்லை. உண்மையிலேயே ஒரு அதிகாரி ஒரு வழக்கின் விசாரணையை எப்படி நடத்துவார், அதற்காக அவர் எப்படிப்பட்ட சிரமங்களை எல்லாம் சந்திப்பார் என்பதை ஒரு புது அனுபவமாக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வினோத்.

நேர்மையான போலீஸ் டிஎஸ்பி கார்த்தி. காதல் மனைவி ரகுல் ப்ரீத்துடன் தூத்துக்குடியின் தன் போலீஸ் வேலையை ஆரம்பிக்கிறார். அவரது அதிரடியான, நேர்மையான குணத்தால் தொடர்ந்து மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு டிஎஸ்பியாக பணி அமர்த்தப்படுகிறார். அப்போது ஒரு குடும்பத்தையே கொடூரமாகக் கொன்று கொலை செய்து, கொள்ளையடித்து விட்டுச் செல்கிறது ஒரு கும்பல். அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் கார்த்தி. எந்த சாட்சியங்களும் இல்லாமல், எந்த தடயங்களும் இல்லாமல் நடத்தப்பட்ட அந்த கொலை, கொள்ளை சம்பவத்தை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

‘சிறுத்தை’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் கார்த்தி மீண்டும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை விட இந்தப் படத்தில் நடிப்பில் இன்னும் ஒரு உயரத்தைத் தொட்டிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில்தான் அசத்தியிருக்கிறார் என்று பார்த்தால் ரொமான்சில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அதிலும் ரகுலைக் ‘ஐ லவ் யூ’ சொல்லச் சொல்லி அவர் அடிக்கும் கூத்து இருக்கிறதே, காதல் கதைகளில் கூட இப்படி ஒரு காதல் காட்சி இருக்காது. அரை மணி நேரத்திற்குப் பிறகு படத்தின் அடையாளமே அப்படியே மாறிவிடுகிறது.

டிஜிபியியுடன் நடக்கும் மீட்டிங்கிலும் கூட அவரது நேர்மையை வெளிப்படுத்தும் காட்சிகள் தியேட்டரில் கைதட்டலை வரவைக்கின்றன. மீண்டும் ஒரு கொலை, கொள்ளை சம்பவம் நடந்து விடக் கூடாதென அவர் தவிக்க கடைசியில் அவருடைய மனைவியே அந்த கொள்ளை கும்பலிடம் மாட்டிக் கொள்வதும் கூட யதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது. மனைவி கோமாவில் இருந்தாலும் கொள்ளையன் ஓமாவைப் பிடிக்க அவர் எடுக்கும் தீவிரமான முயற்சி ‘தீரன்’ கதாபாத்திரத்தை ‘வீரன்’ என்றே சொல்ல வைக்கிறது.

ரகுல் ப்ரீத் சிங்கின், அந்த கொஞ்சல், அந்த குறும்பு, அந்த நகைச்சுவை, இதற்கு முன் நடித்த சில தமிழ்ப் படங்களில் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. திறமையை வெளிப்படுத்தக் கூட நல்ல கதாபாத்திரங்கள் வேண்டும் என்பதை ரகுல் இந்தப் படம் மூலம் புரிய வைத்திருக்கிறார். தமிழில் ஒரு ரவுண்டு வருவார் ரகுல் என்பது உறுதி.

அபிமன்யு சிங் தான் வட மாநில கொள்ளை கூட்டத்தின் தலைவன். தனியாகத் தெரிந்தாலும் அனைத்து கொள்ளையர்களின் நட்சத்திரத் தேர்வும் நிஜமான கொள்ளைக் கூட்டமாகவே தெரிகிறார்கள்.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட், தன்னை ஒதுக்க வேண்டாம் என கார்த்தியிடம் கேட்கும் காட்சியில் கைதட்டல் வாங்குகிறார்.

ஜிப்ரான் இசையில் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரும் பிளஸ். சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு ராஜஸ்தான் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறது. திலீப் சுப்பராயனின் சண்டைப் பயிற்சி இந்த ஆக்ஷன் படத்தில் அசத்தல். அதிலும், அந்த பேருந்தில் நடக்கும் சண்டைக் காட்சி சிலிர்க்க வைத்திருக்கிறது.

கார்த்தி, ரகுல் இடையிலான காதல் காட்சிகள் கொஞ்சம் நீளம் என்றாலும் சுவாரசியத்தைக் குறைக்கவில்லை. இடைவேளை வரை படம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பைக் கூட்டுகிறது. இடைவேளைக்குப் பின்னர் கார்த்தி கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க ஓடுகிறார், ஓடுகிறார், ஓடிக் கொண்டேயிருக்கிறார். அதுதான் கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. அவற்றை இன்னும் கொஞ்சம் கத்தரித்திருக்கலாம்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக வந்துள்ள வித்தியாசமான போலீஸ் படம் எனத் தாராளமாகச் சொல்லலாம்.

Read Previous

யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கும் ‘பியார் பிரேமா காதல்’

Read Next

தமிழில் அறிமுகமாகும் சிரஞ்சீவி குடும்பத்துப் பெண்