சிபிராஜ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்க சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ‘சத்யா’ படத்தில் ரம்யா நம்பீசன் கணவராக நடித்திருப்பவர் சித்தார்த்தா சங்கர்.
படத்தில் கவனிக்கப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு நடிக்க வந்திருக்கிறார்.
தன் திரையுலக அனுபவம் குறித்து சித்தார்த்தா சங்கர் கூறியதாவது,
“நான் மலேசியாவில் பொறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர், அம்மா மலேசியா, அங்கேயே டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை, ஆனால் அம்மா ரொம்பவும் கண்டிப்பாக படிப்புதன் முக்கியம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் பிடிவாதமாக நடிக்க வந்து விட்டேன்.
நாசர் சாரிடம் நடிப்பை முறையாகக் கத்துக்கிட்டேன். நான் போகும் ஜிம்முக்கு விஜய் ஆண்டனி வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டேன். ‘சைத்தான்’ படத்தில் நடிக்க வைத்தார். படத்துக்காக மொட்டை அடித்தேன். அந்தப் படத்தைப்பார்த்து விட்டு எனக்கு ‘ஐங்கரன்’ படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதில் படம் முழுக்க வரும் வில்லன் ரோல்.
அந்த படம் நடித்து கொண்டிருக்கும் போதே ‘சத்யா’ படத்துக்காக நடிக்க ஆடிஷன் போனேன். என் நடிப்பைப் பார்த்ததும் சிபிராஜூக்குப் பிடித்துப் போனது. அதனால் ஓகே பண்ணினார். படத்தில் வில்லன் ரோல் என்றாலும் முக்கியமான ரோல் அது. நானும் ஆனந்த்ராஜும் நடிக்கும் காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்த்து விட்டு எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இதனால் என்னை செல்லமாக கோபித்துக் கொண்டார். அதன் பின் நடித்து முடித்தேன்.
படத்தில் ரம்யா நம்பீசன் என் மனைவியாக நடித்திருந்தார். அவருடன் நெருக்கமான கட்சியில் நடிக்கக் கூச்சமாக இருந்தது. ஆனல் அவர்தான் எப்படிக் கட்டிபிடிக்க வேண்டும், எப்படி வலிக்காமல் கையைப் பிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
‘சத்யா’ படத்தைப் பார்த்து விட்டு ‘ஈட்டி’ பட இயக்குனர் ரவி அரசு, ‘விடியும் முன்’ இயக்குனர் பாலகுமார் ஆகியோர் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை நடிப்புதான் முக்கியம். எந்தக் கதாபாத்திரம் என்பது முக்கியமல்ல, நாயகனாக நடிப்பதை விட வில்லனாக நடித்தால் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படலாம், ரசிகர்கள் கவனத்துக்கு வரமுடியும். அதனால் ரகுவரன் மாதிரியான மெஜஸ்டிக்கான வேடத்தில் நடிக்க வேண்டும்,” என்கிறார் சித்தார்த்தா சங்கர்.