இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். சென்னை, மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர். அவர் கொளத்தூர் நகைக் கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற போது, அங்கிருந்த கொள்ளையர்களால் கொல்லபட்டு மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான சாலை புதூரில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் கார்த்தி அங்கிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ள சாலை புதூருக்குச் சென்று பெரிய பாண்டியன் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்திய பின் கார்த்தி கூறியதாவது,

பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான் நான் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தைப் பார்த்ததாகத் தெரிவத்தார்.

‘தீரன்’ படத்தைப் பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா ??, இதைப் போன்ற ஒரு கும்பலைத்தான் நம்முடைய கணவரும் பிடிக்க சென்றிருப்பாரோ என்று தோன்றியது. அதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன் தீரன் படம் பார்த்தேன் அதில் வந்த பயங்கரமான காட்சிகளைப் பற்றி கூறி அவரது கணவரிடம் கவனமாக இருங்க, உங்களுடன் இன்னும் சில காவல் துறையினரை அழைத்துச் செல்லுங்கள். மனதுக்கு சரியில்லை, அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்து கொண்டே இருக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தடைந்தது என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

உண்மை சம்பவமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிக்கும் போதே இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா என்று மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தைத் தந்துள்ளது.

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15 சென்ட் இடத்தை அந்தர ஊரில் பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னைப் போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல்லெண்ணத்தில்தான் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்குச் சென்று வீர மரணம் அடைந்துள்ளார். ஊர் மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய வசதிகளை வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சாமாதியில் நிற்கும் போது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. அவருடைய ஆன்மாவுக்கும் , குடும்பத்தாருக்கும் பிராத்தனை செய்கிறேன்,” என்றார் நடிகர் கார்த்தி.

Read Previous

சமூக வலைத்தள மர்மங்களை வெளிப்படுத்தும் ‘இரும்புத் திரை’

Read Next

மாயவன் – விமர்சனம்