ஜிப்ரான் இசையமைத்து, தயாரித்துள்ள ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படம் கடந்த வெள்ளியின்று வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில், கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் இது. படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு பற்றி இயக்குனர் அப்பாஸ் அக்பர் கூறுகையில்,
”இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். இந்த காத்திருப்பு காலம் மிகக் கடினமாக இருந்தது. அதிலிருந்து மீண்டு வந்து, படத்தை ரிலீஸ் செய்து, இது போன்ற அருமையான வரவேற்பைப் பெறுவதே எங்கள் கனவாகவும் பிரார்த்தனையாகவும் இருந்தது.
எங்களது இந்த பிரார்த்தனை தற்போது பலித்துள்ளது. ‘சென்னை2சிங்கப்பூர்’ படம் ‘ஹிட்’ என வணிக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் படத்திற்கான திரைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. எங்களின் உழைப்பிற்கும், நாங்கள் சந்தித்த தடைகளுக்கும் மக்கள் தந்துள்ள அபார வரவேற்பு எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது”, என்றார்.
இப்படத்தை ‘காமிக்புக் இந்தியா பிரைவேட் லிமிடெட் புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரித்துள்ளது.