‘அனிருத்’ படத்திற்கு பாடல் எழுதிய 7 பாடலாசிரியர்கள்

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் ‘அனிருத்’.

தெலுங்கில் ‘பிரம்மோற்சவம்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடித்துள்ளார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
மிக்கி ஜே. மேயர் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இசை வெளியீட்டில் வசனம் மற்றும் பட ஒருங்கிணைப்பு செய்துள்ள A.R.K.ராஜராஜா பேசியதாவது,

“தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவருக்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை ! என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்தப் படத்தின் கதை. முதன் முறையாக இந்த படத்தில் ஏழு பாடலாசிரியர்களை அறிமுகப் படுத்துகிறோம்.

யுவகிருஷ்ணா, இவர் வண்ணத்திரை வார இதழின் ஆசிரியர். இந்த படத்தில் இடம் பெறும் “உன்னோடு பயணம் ஓஹோ சலிக்காத சந்தோஷம் ஓஹோ” என்ற பாடலை வெறும் 10 நிமிடங்களில் எழுதிக் கொடுத்தார்.

மகேந்திரன் குலராஜா, இவர் பிரான்ஸில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இவர் எழுதிய “வதனம் அழகு வார்த்தை இனிதே “ என்ற பாடல் மிகவும் அற்புதமாக இருக்கும்.

டாக்டர் கர்ணா, இவர் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர் எழுதிய “ யாரோ பெண்னொருத்தி சின்ன நெஞ்ச கொத்தி” என்ற பாடல் மிகவும் சிறப்பாக இருக்கும்.

திருமலை சோமு. இவர் தினமணி பத்திரிகையின் இணையதள ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ’பிரபாஸ் பாகுபலி, எவண்டா’ போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் “ஆடிப்பாடும் நாளும் வருகிறதே “ என்ற பாடலை எழுதி இருக்கிறார்.

எழில் வேந்தன், இவர் “சூப்பர் போலீஸ், விளையாட்டு ஆரம்பம்” போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் “ புட் யுவர் ஹான்ஸ் அப்’ என்ற ‘பப்’ பாடலை எழுதி இருக்கிறார்.

அம்பிகா குமரன், இவர் ஒரு பட்டிமன்ற பேச்சாளர். இந்த படத்தில் “அந்தமான் கண்ணுக்காரி அரிசி மாவு பேச்சுக்காரி” என்ற பாடலை எழுதியிருக்கிறார்.

பாசிகாபுரம் வெங்கடேஷ், இவர் ஒரு பட்டிமன்ற பேச்சாளர், தமிழ்க் கவிஞர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பல பரிசுகளை பெற்றவர். படத்தின் முதல் பாடலான “வாழ்க்கை ஒரு நீரோட்டம் வாழ்ந்திருந்தா கொண்டாட்டம்“ என்ற பாடலை எழுதி இருக்கிறார்.

படத்தில் எல்லா நினைவுகளும் சந்தோஷமான நினைவுகளாக இருக்கும். அதனால் தான் பல துறைகளைச் சார்ந்த வல்லுனர்களை பாடல் எழுத வைத்தோம். டப்பிங் படம் என்பதை மீறி ஒரு நேரடி தமிழ்ப் படமாக, ஒரு புது கலராக இந்த ‘அனிருத்’ இருக்கும் என்கிறார் A.R.K.ராஜராஜா.

Read Previous

‘சென்னை 2 சிங்கப்பூர்’ வெற்றி, இயக்குனர் மகிழ்ச்சி

Read Next

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்த நடிகை யார் ?