கலை சினிமாஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தாதா 87’.
‘தாதா 87’ படத்தின் டீசர் ஏற்கெனவே வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது இப்படத்திற்காக ‘ஒரு நிமிஷம் தலை சுத்தும்’ என்ற தலைப்பில் ‘தாதா 87’ படத்திற்காக ஒரு விளம்பரப் பாடலை படக்குழுவினர் உருவாக்கியிருக்கிறார்கள்.
இப்பாடலை படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ எழுதியுள்ளார். நடிகர் ஐனகராஜின் மகன் நவின் ஐனகராஜ் இப்பாடலைப் பாடியுள்ளார். லியாண்டா் லீ இசையில் உருவான இப்பாடலை பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரஜினிகாந்த் சமீபத்தில் அவருடைய ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “நிருபர்கள் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்ட போது ‘ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி’ என்று பேசியிருந்தார். அது உடனடியாக டிரென்ட் ஆனது. அதை வைத்து பலரும் பல மீம்களை உருவாக்கி பரபரப்பாக்கி இருந்தனர்.
இப்போது அதையே ஒரு பாடலாகவும் ‘தாதா 87’ படத்தில் மாற்றிவிட்டார்கள்.
இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பிப்ரவரி மாதம் ‘தாதா 87’ படம் வெளியாக உள்ளது.