‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ வடிவேலு வருவாரா, மாட்டாரா ?

ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடிக்க ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியிடப்பட்டது.

தொடர்ந்து சென்னை, பூந்தமல்லி அருகே சுமார் 5 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமானது. சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்த வடிவேலு அதன் பின் படத்தின் தலைப்பு போலவே இம்சை செய்ய ஆரம்பித்துள்ளார்.

அவரின் தலையீடு பிடிக்காத இயக்குனர் சிம்புதேவன் தயாரிப்பாளர்களிடம் புகார் தெரிவிக்க, அத்துடன் படப்பிடிப்பு நின்று போனது. கடந்த சில மாதங்களாக போடப்பட்ட அரங்குகள் அப்படியே உள்ளன. அவற்றால் மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர். அதன் பின் நடவடிக்கையில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கத்தின் அழைப்பு எதற்கும் வடிவேலு செவி சாய்க்கவில்லை. கடைசியில் இயக்குனர்கள் சங்கம், பெப்சி சங்கம் ஆகியவற்றுடன் ஒரு கூட்டுக் குழுவை உருவாக்கியது தயாரிப்பாளர் சங்கம்.

அதன் பின் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வடிவேலு சார்பாக அவரது மேலாளர் கலந்து கொண்டுள்ளார். முடிவில் எந்த நிபந்தனையும் இல்லாமல் படத்தில் வடிவேலு ஒப்பந்தப்படி மீண்டும் நடிக்க வேண்டும். இல்லையென்றால் படத்திற்கு இதுவரை ஆன செலவுகள் அனைத்தையும் வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்கள்.

கூட்டுக்குழுவின் நடவடிக்கையால் அதிர்ந்து போன வடிவேலு மீண்டும் படப்பிடிப்புக்கு வருவாரா, மாட்டாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Read Previous

‘காலா’ டீசர் சாதனைகள் என்ன ?

Read Next

‘விஸ்வாசம்’ ரிலீஸ் அடுத்த ஆண்டு ?