‘விவேகம்’ படத்திற்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ், இயக்குனர் சிவா, அஜித் மீண்டும் இணையும் படம் ‘விஸ்வாசம்’.
இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் நவம்பர் மாதமே வெளியானது. ஜனவரி 2018ல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவித்தார்கள்.
ஆனால், திட்டமிட்டபடி படத்தை அப்போது ஆரம்பிக்கவில்லை. கதை முழு வடிவம் பெறாததே அதற்குக் காரணம் என்கிறார்கள்.
படத்தின் நாயகியாக நயன்தாரா, படத்திற்கு இசையமைப்பாளர் இமான் என்பதை கடந்த மாதம்தான் அறிவித்தார்கள். அடுத்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.
மேலும், இந்தப் படம் வட சென்னையை மையப்படுத்திய கதை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், படத்தை நிஜமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் சில கோடி ரூபாய் செலவில் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் உருவாக்கும் வேலைகள் நடந்து வருகிறதாம்.
அதெல்லாம் முடிந்த பின் படப்பிடிப்பை மார்ச் மாதக் கடைசியில் இருந்து ஆரம்பிக்க உள்ளார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதனால், முன்னர் திட்டமிட்டபடி படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட வாய்ப்பில்லை என்கிறார்கள். அதனால், 2019ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.
சமீப காலமாக ‘விஸ்வாசம்’ படம் பற்றிய அறிவிப்புகளில் படத்தின் வெளியீடு பற்றி எதுவும் குறிப்பிடாமல் இருந்ததைப் பார்த்து நீங்கள் அதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆக, தீபாவளிக்கு விஜய்யும், அஜித்தும் மோதிக் கொள்ளும் வாய்ப்பு நடக்க வாய்ப்பில்லை.