முன் அனுமதி பெற்று நடந்த விஜய் படத்தின் படப்பிடிப்பு

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 16ம் தேதி முதல் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. வெளிநாடுகளில் மட்டும் 23ம் தேதி வரையிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டது.

இதனிடையே, இன்று விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடைபெறுவதாக காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தது. இதனால், மற்ற தயாரிப்பாளர்களிடையே சர்ச்சை எழுந்தது. ஒரு சிலர், அதை எதிர்த்து வாட்ஸ்-அப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

அதன் பின் தயாரிப்பாளர் சங்க வட்டாரங்களில் விசாரித்ததில், நான்கு படங்களுக்கு மட்டும் ஒரு வாரத்திற்கு முன்பே படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி அளித்தாகவும், அதில் விஜய் படமும், மூன்று சிறிய படங்களும் அடங்கும் என்றார்கள். அந்தப் படங்களுக்கான செட் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்தினால் முழு படத்தின் படப்பிடிப்பும் நிறைவடையும். இல்லையென்றால் ஸ்டிரைக் முடியும் வரை அந்த செட்டை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, அவர்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தார்களாம். அந்த அனுமதியும் போராட்டத்திற்கான கமிட்டி அனுமதியுடன்தான் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

விஜய் நடித்து வரும் படம், நாடோடிகள் 2, டெல்லியில் ஒரு படம், மற்றுமொரு படம் என நான்கு படங்களின் சார்பாக அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கான காரணங்களை விளக்கிக் கூறி தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி கொடுத்துள்ளனர். அவற்றை தீர விசாரித்த பிறகே தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கொடுத்துள்ளது என்கிறார்கள்.

விஜய் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவராம். அவருடைய கால்ஷீட் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால், அங்கிருந்து 30 பேருடன் வந்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இல்லையென்றால் ஸ்டிரைக் முடியும் வரை அந்த இரண்டு நாட்களுக்காக அந்த முழு செட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்பதால்தான் சிறப்பு அனுமதி கொடுத்ததாக தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ் தெரிவித்துள்ளார்.

அதற்குள் சில தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மை என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் வாட்ஸ்-அப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் ‘விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா ?’ என கேள்வி எழுப்பிவிட்டதாகத் தெரிகிறது.

மேலும், 23ம் தேதிக்குப் பிறகுதான் முழு போராட்டமும் தீவிரமாகும் என்றும், அதன் பின் யாருக்கும் சிறப்பு அனுமதி கிடையாது என்றும் தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

சிரஞ்சீவி படப்பிடிப்புக்குச் சென்ற நயன்தாரா

Read Next

‘பாகுபலி 2’க்கு சென்சார் வழங்கியது சீனா, விரைவில் ரிலீஸ்