விவசாய வளர்ச்சிக்கு 1 கோடி வழங்கிய சூர்யா

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் விவசாய வளர்ச்சிக்கு 1 கோடி ரூபாயை சூர்யா வழங்கினார். விவசாயத்தில் பல சாதனைகளைப் புரிந்து வரும் நெல் ஜெயராமன், ஆலங்குடி பெருமாள், திருவலஞ்சுழி சேகர், மரம் தங்கசாமி, விதை நெல் விஜயலட்சுமி ஆகியோருக்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும், அவர்களிடம் விவசாய வளர்ச்சிக்காக 1 கோடி ரூபாயை சூர்யா வழங்கினார். எப்படிப்பட்ட திட்டங்களுக்கு அந்த 1 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளார்கள். சூர்யா குடும்பத்தினர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் அதற்கான பணிகளை மேற்பார்வை செய்யும் என்றும் சூர்யா அறிவித்தார்.

விழாவில் சூர்யா பேசியதாவது,

“எல்லா புகழும் இயக்குனர் பாண்டிராஜுக்கே…அவரைத் தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றி படமாக இதை கொடுத்திருக்க முடியாது. பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்தே வெகுநாளாகிவிட்டது. இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த படம் நல்ல செய்திகள் பலவற்றை சொல்ல முடியும் என்பதை நிருபித்துள்ளது. இங்கே நமது தமிழ் நாட்டில் நிறைய டாக்டர்கள் , என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியைக் கொண்டு வருவது கடினமான ஒரு விஷயமாக உள்ளது.

இந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்பு தான். எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால் தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும். ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்கு கருத்து சொல்லும் தரமான படங்களைத்தான் எடுப்போம்.

விழாவில் கார்த்தி பேசும் போது

நிறைய பேர் நல்ல படம் ஜெயப்பதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அது பொய். நிஜமாகவே நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக ஓடும். திரையரங்கில் மல்லிகைப் பூ வாசம் மற்றும் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது என்று சொல்லும் போது படத்துக்கு அனைவரும் குடும்பத்தோடு வருகிறார்கள் என்று தெரிகிறது.

நாங்கள் ஸ்டாப் என்ற அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் வெள்ளை சர்க்கரையை எப்படி நிறுத்துவது, நாம் குறைவாக உபயோகிக்கும் மஞ்சளை எப்படி நமது தினசரி வாழ்கையில் சேர்த்துக் கொள்வது, தினமும் நாம் உண்ணும் உணவில் மஞ்சள் சேர்த்தால் கேன்சர் வராது, எண்ணெய் பயன்பாடு, தானியங்களின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி இந்த அமைப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும்.

நடிகர் சத்யராஜ் பேசும் போது,

பணக்காரர்கள் செல்வதற்காக அரங்களை வெட்டி சாலைகளை அமைக்கிறோம், நாட்டைப் பாதுக்காக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு இந்தப் படத்தை முதலில் போட்டுக் காட்ட வேண்டும். விவசாயிகளுக்கு உதவுவதற்கு பெரிய மனது வேண்டும், அதை சூர்யா செய்கிறார். படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது. நான் ஆரம்பத்திலிருந்தே இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்றேன், அதன்படியே படமும் வெற்றி பெற்றுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது,

படத்தின் துவக்கத்தில் கார்த்தி சார் என்னுடைய கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பாரா என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. அவருடன் பயணம் செய்ய ஆரம்பித்ததும் எல்லாம் சரியாக இருந்தது. நான் நடிகர்களிடம் கோபமாக இருப்பேன் என்ற புரளியை யாரோ கிளப்பியுள்ளார்கள், அது சுத்த பொய்.

படத்தில் இடம்பெற்ற ரேக்ளா ரேசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து கொண்டாடுகிறார்கள். அதை படத்தில் கொண்டு வர நானும் ராஜா சாரும் மிகவும் சிரமப்பட்டோம் என்பது தான் உண்மை. பீட்டாவை சேர்ந்தவர்கள் படத்தை பார்த்துவிட்டு 1 நிமிடத்தை நீக்கிவிட்டார்கள்.

எங்கள் ஆடு , மாடுகளை நாங்கள் அண்ணன், தம்பியாக பார்த்து வருகிறோம். நானும் ஆடு , மாடு மேய்த்து வந்தவன் தான். எங்களை விட சிறப்பாக அவற்றை யாராலும் பார்க்க முடியாது. உங்களால் ஆட்டை அல்லது மாட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓட்டிக் கூடச் செல்ல முடியாது.

எங்கள் ஆடு மாடுகளை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு கல்யாண வீட்டுக்கு சென்றால் கூட நாங்கள் மாடு சாப்பிடாம இருக்குமே, தண்ணி வைக்கணுமே என்று ஓடி வருவோம். மட்டன் , சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியும்.

Read Previous

‘சுமோ’ இல்லாமல் என்னால் வாழ முடியாது – இயக்குனர் ஹரி

Read Next

விறுவிறுப்பான முன்பதிவில் ‘ஜுங்கா’