தமீன்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்கம் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஹரி,
“தயாரிப்பாளர் ஷிபு ஒரு வெற்றிகரமான விநியோகஸ்தராக இருந்து தரமான தயாரிப்பாளராக உயர்ந்திருப்பவர். ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள உண்மையான காரணத்தை நடுநிலையோடு சொல்பவர் ஷிபு.
தரமான படத்திற்காகத் தேவைப்படும் அனைத்து செலவுகளையும் இந்தப் படத்தில் செய்திருக்கிறார். இப்படத்திற்காக ஐந்து மாநிலங்கள், ஆறு விமான நிலையங்கள், இருபதிற்கும் மேற்பட்ட சுமோக்கள், சுமோக்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. இருபதிற்கும் மேற்பட்ட கார்களை வாங்கி அடித்து உடைத்திருக்கிறோம். இதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்டவையல்ல. கதை கேட்டதால் செலவு செய்திருக்கிறோம்.
‘சாமி’ படத்தின் முதல் பாகத்தை முடிக்கும் போது இரண்டாவது பாகத்திற்கான லீட் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த போலீஸ் கதைகள் பண்ணும் போது ஒவ்வொரு எபிசோடாக அது காலியாகிவிட்டது. ஆனால் விக்ரமை சந்திக்கும் போதெல்லாம் அவரிடம் சரியாக கதை அமைந்தால் மட்டுமே அடுத்த பாகத்தைத் தொடர்வேன் என்று சொல்லிவிட்டேன். ஏனெனில் விக்ரம் கமர்சியல் ஹீரோ மட்டுமல்ல நடிப்பு திறன் வாய்ந்த நடிகரும் கூட. பிறகு நல்லதொரு கதை அமைந்த பிறகே ‘சாமி ஸ்கொயர்’-ஐத் தொடங்கினேன்.
பெருமாள் பிச்சை சாமிக்கும் ஆறுச்சாமியின் சாமிக்கும் இடையே நடைபெறும் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை.
கடைசி நேரத்தில் கேட்ட போது முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷை மனதார பாராட்டுகிறேன்,”என்றார்.
விக்ரம் பேசகையில்,
“சாமி என்னை கமர்சியல் ஹீரோவாக நிலை நிறுத்திய படம். தில், தூள் வரிசையில் அமைந்த மற்றொரு மாஸான படம்.
இயக்குநர் ஹரியைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர் ஒரு படத்தை இயக்குவதை தவம் போல் ஒய்வேயில்லாமல் அர்ப்பணிப்புடன் செய்வார்.
‘கந்தசாமி’ படத்தில் எல்லா பாடல்களையும் பாட வைத்ததற்கு இயக்குநர் சுசிக்கும், தேவி ஸ்ரீபிரசாத்திற்கும் நன்றி சொல்லவேண்டும். அந்த படத்தில் அந்த ஒரு விசயத்தை நான் புதிதாக செய்திருக்கிறேன். அதே சமயத்தில் மற்ற இசையமைப்பாளர்களை விட தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் பாடும் போது, பாடல்வரிகளுக்குள் இருக்கும் எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடச்சொல்வார். இந்த வரிக்கு காமெடியாக முயற்சிக்கலாமா…? இந்த எமோஷனில் பாடலாமா..? என சொல்வார்.
இந்தப் படத்தில் நான் பாடிய பாடலில் கூட ‘ஏக்க்க்க்..’ என ஒரு இடத்தில் வரும். அதில் ஒரு எமோஷனை முயற்சித்திருப்போம். இது அவரின் ஸ்பெஷல். ஆனால் எனக்கு மெலோடி பாடல் பாட ஆசை. அடுத்த முறையாவது எனக்கு மெலோடி பாட்டை பாட வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் உடலை ஏற்றி இறக்கி நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்.
ஒரு சிக்கலான சூழலில் ‘இருமுகன் ’ படத்திற்கு கைகொடுத்து ஒத்துழைப்புக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஷிபு. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது சந்தோஷம்,” என்றார்.