கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய்எஸ்ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’.
இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.
இசையமைப்பாளர்கள் டி. இமான், ஜி.வி.பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், சாம் சிஎஸ் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், நடிகர்கள் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, படத்தின் நாயகி ரைசா வில்சன், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக், இயக்குனர்கள் அமீர், அகமது, ராம், சீனு ராமசாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய யுவன்ஷங்கர் ராஜா,
“நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன். நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அது அப்படியே கிடப்பில் கிடந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் உங்க ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார்.
என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் என் ஃபேவரைட் பாடல் ‘நிலவே நான் எங்கிருந்தேன்’ என்ற பாடல் தான்,” என்றார்.
இயக்குனர் இளம் பேசுகையில்,
“குறும்படங்கள் இயக்கி வந்த நேரத்தில் ஒரு பெரிய கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. 21 வயதில் ஈஸியாக வாய்ப்பு கிடைச்சிருச்சுனு நினைச்சேன். ஆனா, அது நடக்கல, அப்போ தான் சினிமான்னா என்னனு தெரிந்து கொண்டேன். சில வருட போராட்டத்துக்கு பிறகு, யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிற படத்துக்கு காதல் கதை கேட்குறாங்கனு கேள்விப்பட்டேன். அந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பாளர்னு சொன்னாங்க. கரும்பு தின்ன கூலியா, இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்று நினைத்தேன்,” என்றார்.
ஹரீஷ் கல்யாண் பேசும் போது,
“படத்துலயும் நிறைய காதல் இருக்கு, படத்து மேலயும் நிறைய பேருக்கு காதல் இருக்கு. அதனால் தான் இந்த படம் இன்னைக்கு இந்தளவுக்கு வந்திருக்கு. இளன் என்னை விட 2 வயசு சின்னவர். இவ்வளவு இளமையான ஒரு படத்தை கொடுத்திருக்காரு. சின்ன வயசுல இருந்தே யுவன் பாடல்களை கேட்டு வளர்ந்தவன். இன்று அவர் தயாரிக்கும் முதல் படத்தில், அவர் இசையில் நாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சியான தருணம்,” என்றார்.
இளையராஜா பேசுகையில்,
“பியார் பிரேமா காதலுக்காக, அன்புக்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக் கருவிகளை பயன்படுத்துங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்,” என்றார்.