விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, தினமும் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் நேற்றைய 31 ஜுலை 2018 ஒளிபரப்பு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு தலைவர் நியமிக்கப்படுவார். அவருக்கென தனி அதிகாரம் உண்டு. இந்த வாரம் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஸ்வர்யா தத்தா-விற்கு சர்வ அதிகாரத்தையும் வழங்கியுள்ளார் பிக் பாஸ்.
ஐஸ்வர்யாவுக்கு ஆலோசகராக ஜனனி-யும், பாதுகாவலராக டேனி-யும் நியமிக்கப்பட்டனர். இந்த டாஸ்க் பற்றி பாலாஜி, பொன்னம்பலத்திடம் பேசுவதை, வேறு அறையில் இருந்த ஐஸ்வர்யாவுக்கு காட்டப்பட்டது. பாலாஜி ஐஸ்வர்யாவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதன் பின் ஐஸ்வர்யா அவருடைய அதிகாரத்தைக் கையிலெடுத்தார். எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள முடியாது என்று சொன்ன பாலாஜிக்கு தண்டனை கொடுக்க விரும்பினார். அதற்காக வீட்டிற்குள் இருந்த ஒரு குப்பைக் கூடையை எடுத்து அதிலிருந்த குப்பைகளை பாலாஜி மீது கொட்டினார். தன் மீது குப்பை கொட்டப்பட்டாலும் அதற்கு எந்த விதத்திலும் கோபப்படாமல் அமைதி காத்தார் பாலாஜி.
இந்த நிகழ்வு நேற்று நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நேயர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு டிவி நிகழ்ச்சிதான் என்றாலும், அதில் ஒரு நாகரிகம் வேண்டாமா, காட்டுமிராண்டித்தனமான செய்கையை எப்படி அனுமதிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் சிலர் வரைமுறை இல்லாமல் கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றனர், ஆபாசமாக உடை அணிகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே இருந்து வருகிறது.
அந்நிலையில் நேற்றைய குப்பை கொட்டல் நிகழ்வை ஒளிபரப்பாமல் தவிர்த்திருக்கலாம். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒருவரைப் பற்றி மற்றவர் புறம் பேசுவதாகத்தான் இந்த நிகழ்ச்சி பெரும்பாலும் அமைகிறது. அதில் பலவற்றை ‘எடிட்’ செய்துதான் ஒளிபரப்புகிறார்கள். ஆனால், வேண்டுமென்றே நேற்று நடந்த நாகரிகமற்ற சம்பவத்தைக் காட்டி, நேயர்களிடம் ஒரு பரபரப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சீசனில் மனநலம் குன்றியவர்கள் பற்றிய ஒரு டாஸ்க் இடம் பெற்று அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர் அப்படி இடம் பெற்றதற்கு கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தார். அது போல் மீண்டும் நடந்தால் நிகழ்ச்சியை விட்டு விலகுவேன் என்றும் கூறியிருந்தார்.
கடந்த சீசனில் அப்படிப் பேசிய கமல்ஹாசன், இந்த சீசனில் நேற்று நடந்த நிகழ்வுக்கு என்ன சொல்லப் போகிறார் ?.
பலர் கமல்ஹாசன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு அரசியல் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் மக்களின் மன ஓட்டத்துக்கு மதிப்பளிப்பாரா என்பது வரும் சனிக்கிழமை அன்றுதான் தெரியும்.