ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர் 8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் ‘யு-டர்ன்’.
கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் இது. கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் தமிழ், தெலுங்கு ரீமேக்கை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகி சமந்தா,
“யு டர்ன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனபோது 2 மில்லியன் வியூஸ் போகும், ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தருவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்தப் படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதை தான் படத்தின் மிகப்பெரிய ஹீரோ.
‘லூசியா’ படத்தில் இருந்தே நான் பவன் குமாரின் பெரிய ரசிகை. அப்போதே இவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டேன். இந்த படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. இந்த படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது.
முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்த படத்தை முடித்தோம். தமிழில் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார். இப்போது பாதுகாப்பான கைகளில் இந்த படம் இருப்பதாக உணர்கிறேன். மிகவும் யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே ஆசை. அது தான் இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தது.
படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு. எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது. கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்து முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியை நடிக்க வேண்டும். அது மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் நான் உணர்கிறேன்,” என்றார் நாயகி சமந்தா.
செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பை கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன் வெளியிடுகிறார்.