மேற்கத்திய பாணியில் உருவாகியுள்ள ‘வஞ்சகர் உலகம்’

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் ‘வஞ்சகர் உலகம்’.

சாம் சிஎஸ் இசையமைப்பில் குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் முதல் 25 நிமிடக் காட்சிகள் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது.

படம் பற்றி பேசிய இயக்குனர் மனோஜ் பீதா,

“இப்படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் திரைக்கதை எழுத மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக எடுத்துக் கொண்டோம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் இருந்தன. சரியான திட்டமிடல் மூலம் ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ நல்ல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.

நான் செல்வராகவன் சாரின் பெரிய ரசிகன். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது கட் அடித்து விட்டு போய் பார்த்த படம் ‘புதுப்பேட்டை’. அந்தப் படம் பார்த்தபோதே நாங்கள் படம் எடுத்தால் அழகம் பெருமாள் அந்தப் படத்தில் இருக்க வேண்டும் என நினைத்தோம்.

சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வதுதான் இந்த படம். குரு சோமசுந்தரம் மைய கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். நிறைய இடங்களில் அலட்டல் இல்லாமலே சைலெண்டாக நடித்திருப்பார்.

சாம் சிஎஸ் பல நேரங்களில் உந்துதலாக இருந்தார். முதல் படம், நானே எழுதி இயக்குவதில் எனக்கு உடன்பாடே இல்லை. மேற்கத்திய தாக்கத்தில் படம் இருக்க திட்டமிட்டு உழைத்தோம். சாந்தினி படத்தின் மிகப்பெரிய பலம். ஜான் விஜய் பாடி லாங்குவேஜ் புதிதாக இருக்கும். 4 மணி நேரம் இருந்த படத்தை எடிட் செய்து மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஆண்டனி.

‘ஏ’ சான்றிதழ் கொடுப்பதற்கு பதில் 18+ என கொடுத்தால் நன்றாக இருக்கும். ‘ஏ’ என்றால் அது வேறு மாதிரி என நினைக்கிறார்கள்,” என்றார் இயக்குனர் மனோஜ் பீதா.

Read Previous

‘யு டர்ன்’, கதைதான் ஹீரோ – சமந்தா

Read Next

80 லட்சம் பேர் பார்த்தால் மெகா ஹிட் – சூர்யா