‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘சீமராஜா’ படத்திலும் இயக்குனர் பொன்ராம், இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன்’ கூட்டணி பாடல்களில் ஹாட்ரிக் வெற்றியை அடித்துள்ளது.
‘சீமராஜா’ பாடல் எங்கும் ஒளி, ஒலித்துக் கொண்டிருப்பது பற்றி படத்தின் இசையமைப்பாளர் இமான் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
“திரை இசையைப் பொறுத்தவரை இசையமைப்பாளர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையில், சில திரைப்படங்கள் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு, பின்னணி இசை கோர்ப்பில் இசையமைப்பாளர்களின் மாயாஜாலத்தால் படத்தை மேலும் மெறுகேற்ற அவர்களை சார்ந்திருப்பார்கள். இன்னொரு பிரிவில், படக்குழுவில் உள்ள மற்றவர்களின் உழைப்போடு போட்டி போட்டு தங்களை நிரூபிக்க இசையமைப்பாளர்கள் சிறப்பான இசையை வழங்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
சீமராஜா இதில் இரண்டாவது வகையைச் சார்ந்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் முதல் அரங்க அமைப்பு, ஒளிப்பதிவு என அனைத்தும் என்னை வியக்க வைத்தது. நான் பின்னணி இசையமைப்பில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்காமல் போனால் நான் படத்தில் தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. மேலும், சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் சீமராஜா ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். அது தான் இசையில் மிகப் பெரிய விஷயங்களைச் செய்ய என்னைத் தூண்டியது.
சகோதரர் சிவகார்த்திகேயன் உடன் பல படங்களில் பணியாற்றியதால் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்தேன். எனினும், நான் இறுதியாக பாடல்களைப் பார்த்தபோது, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தின் அழகான ஒளிப்பதிவு மற்றும் நடன இயக்குனர் ஷோபியின் சிறப்பான நடன அசைவுகள் என பாடலை மேலும் மெறுகேற்றியதாக உணர்ந்தேன்,” என்கிறார்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர் டி ராஜா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, லால் மற்றும் பலர் நடிக்கும் ‘சீமராஜா’, நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.