தமிழ்த் திரையுலகத்தில் பல முக்கியமான படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் சேரன். அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ஆட்டோகிராப்’ படம் பலரின் உணர்வுகளை உலுக்கிய ஒரு படம்.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து வெளிவந்த ‘96’ படமும் ‘ஆட்டோகிராப்’ படம் போல உணர்வுக் குவியலான படமாக இருந்தது என பலரும் பாராட்டினார்கள்.
‘96’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் சேரன் அவருடைய பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
“96 படம் பார்த்தேன், நெஞ்சைத் தொட்டது. எல்லாரும் சொல்றாங்க, அது ‘ஆட்டோகிராப்’ போலன்னு. இல்ல, அது வேற, இது வேற. அது கடந்து வந்த காதல்களை நினைத்து பார்த்து, காதலையும் தாண்டி, இந்த உலகில் நாம் வாழ நிறைய அத்தியாவசியங்கள் இருக்குன்னு சொன்ன படம்.
96, ஒரு அழகான கவிதை. தங்கள் காதலை தொலைத்த இருவர் 20 வருடங்களுக்குப் பின் சந்திக்கும் போது, இருவரின் தவிப்பு, உணர்வு, அழுத்தம், பாசம், ஏமாற்றம், ஆற்றாமை, தோல்வியின் வலி, என இருவருக்கும் இடையிலான வல்வேறு உணர்வுகளை அழகாகப் பதிவு செய்திருக்கும் சிறப்பான படம்.
விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் மிக சிறப்பாக அந்த கதாபாத்திரங்களை செஞ்சிருக்காங்க. விஜய் சேதுபதியும் திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார்.
இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும். இயக்குனருக்கு வாழ்த்துகள். பார்க்க வேண்டிய, அனுபவித்துப் பார்க்க வேண்டிய படம், தவறாமல் பாருங்கள்,” என சேரன் ‘96’ படத்தைப் பாராட்டியுள்ளார்.