‘பேட்ட’ – வரும் ஞாயிறன்று 100 கோடி கடக்கும் என அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் கடந்த வாரம் ஜனவரி 10ம் தேதியன்று வெளியானது.

படம் வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து பல நாட்கள், பல காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில், ‘பேட்ட’ படத்தின் வசூல் ‘விஸ்வாசம்’ பட வசூலை விடக் குறைவாக இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லாமல் டிவிட்டரில் சிலர் கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து கடும் சர்ச்சை எழுந்தது.

சினிமாவிற்கு சம்பந்தமே இல்லாத சிலர் அப்படி பொய்யான தகவல்களைப் பரப்பி சினிமாவைக் கெடுத்துக் கொண்டு வருவதாக சினிமாவைச் சேர்ந்த பலரும் கருத்துக்களை வெளியிட்டார்கள்.

சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களோ, வினியோகஸ்தர்களோ தான் ஒரு படத்தின் வசூல் விவரத்தை சரியாக வெளியிட முடியும். ஆனால், டிவிட்டரில் சில ஆயிரம் பாலோயர்களை வைத்துக் கொண்டு, தாங்கள் வெளியிடுவதுதான் சரி என சிலர் ‘சினிமா வியாபாரம்’ செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களது பொய்யான கருத்துக்களை முடிவுக்குக் கொண்டு வர சன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘பேட்ட’ படத்தின் உலக வெளியீட்டாளர், மற்றும் தமிழ்நாட்டின் பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோரின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் ‘பேட்ட’ படம் 65 கோடி வசூலித்துள்ளதாக அதன் வினியோகஸ்தர் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மாலிக் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் பல படங்களை வினியோகம் செய்த, பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் 11வது நாளில் ‘பேட்ட’ படத்தின் வசூல் 100 கோடியைக் கடக்கும். முதல் முறையாக தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் இந்தப் படம் 100 கோடியைக் கடக்கிறது. இது வினியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து தரும் தகவல்,” எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் இதற்கு முன் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் என சொல்லப்பட்ட படங்களின் வசூல் செய்திகள் பொய்யான ஒன்று என்பது நிரூபணம் ஆகிறது.

‘பேட்ட’ படம் வெளியாகி தொடர்ந்து 6 விடுமுறை நாட்களிலும் ஏறக்குயை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலும், அந்தப் படம் 100 கோடியைக் கடக்க மேலும் சில நாட்கள் தேவைப்படுகிறது. இந்தப் படத்திற்கே இப்படி என்றால் மற்ற படங்கள் வசூலித்ததாகச் சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் 11 நாட்களில் தமிழ்நாட்டில் 100 கோடியைத் தொடும் முதல் படம் ‘பேட்ட’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இனி, மற்ற படங்களின் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் இப்படி அறிவித்தால் பொய்யனா பரப்புரை செய்பவர்கள் அவர்களது பொய்யுரையை இத்துடன் நிறுத்திக் கொள்வார்கள்.

Read Previous

பேட்ட – வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என அறிவிப்பு

Read Next

‘மாரி டான்’-ஐத் தோற்கடித்த ‘மாரி 2 ரௌடி’