தனுஷ், அனிருத் கூட்டணியில் வெளிவந்த ‘மாரி’ படத்தில் இடம் பெற்ற ‘டானு டானு…’ பாடல் தனுஷ் நடித்து வெளிவந்த பாடல்களில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக இருந்தது.
இதில், ‘ஒய் திஸ் கொலவெறி’ விதிவிலக்கு. அது, ஒரு இசை ஆல்பம் போல வெளியாகி பின்னர் படத்தில் சேர்க்கப்பட்டது. தனுஷ் பாடியது இடம் பெற்ற அந்த பாடல்தான் உலக சாதனை படைத்தது. ஆனால், படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்று வீடியோவாக வந்த போது பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
இப்போது, ‘மாரி’ படத்தின் ‘டானு..டானு’ பாடல் வீடியோ பார்வை எண்ணிக்கையை ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் கடந்து அடுத்து சாதனையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
2015ல் வெளிவந்த ‘டானு..டானு..’ பாடலுக்கு இதுவரையிலும் 7 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. ஆனால், 15 நாட்களுக்கு முன்பு வெளிவந்த ‘ரௌடி பேபி’ பாடலுக்கு இதுவரையிலும் 9 கோடிக்கு நெருக்கமான பார்வைகள் கிடைத்துள்ளன.
அது மட்டுமல்ல, தமிழ் சினிமா பாடல்களில் இதுவரையில் யு டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனையை 2017ல் வெளிவந்த ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்..’ பாடல் 9 கோடிக்கும் கொஞ்சம் கூடுதலாகப் பெற்றுள்ளது.
நாளைக்குள் ‘ஆளப் போறான் தமிழன்’ சாதனையை ‘ரௌடி பேபி’ முறியடித்துவிடும். அடுத்து விரைவில் 10 கோடி பார்வைகளையும் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.