கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் ஆரம்பமாகி சில நாட்கள் நடந்தது. அதன் பின்னர் மேக்கப் பிரச்சினை என்று சொல்லி படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.
அடுத்து தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் பிரச்சினை என்று செய்திகள் வெளியாகின. இதுவரையிலும் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட நிலை என்ன என்பது தெரியவில்லை.
இதனிடையே, முன்னர் சொன்னது போல ‘தேவர் மகன் 2’ படத்தின் வேலையை கமல்ஹாசன் ஆரம்பித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ‘இந்தியன் 2, தேவர் மகன் 2’ ஆகிய படங்களுடன் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் இறங்கப் போவதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
‘இந்தியன் 2’ படம் மேலும் தொடராத நிலையில் கமல்ஹாசன் ‘தேவர் மகன் 2’வை ஆரம்பிக்க ஆயத்தமாகி வருகிறாராம். முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைத்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டதாம்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின் ‘தேவர் மகன் 2’ படத்தின் அறிவிப்பும் வெளியாகலாம் எனத் தெரிகிறது.