‘ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி’ படங்களுக்குப் பிறகு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் ‘ஹவுஸ் ஓனர்’.
‘ஆடுகளம்’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி, ‘பசங்க’ கிஷோர், லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் ராமகிருஷ்ணன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஒரு நாளில் வயதான தம்பதியர் இருக்கும் ஒரு வீட்டில் நடக்கும் கதைதான் ‘ஹவுஸ் ஓனர்’. தான் இயக்கிய ஒவ்வொரு படமும் உண்மைக் கதைகளின் பின்னணியில் உருவானவைதான் என்கிறார் லட்சுமி.
இந்தப் படம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது,
பாலக்காட்டு ஐயர் குடும்பத்துப் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் மற்றும் குடும்பக் கதை. ஓய்வு பெற்ற ராணுவ ஆபீசரான கிஷோர், அவருடைய மனைவியான ஸ்ரீரஞ்சனி இருவரும் சென்னை மழை வெள்ளத்தில் அவர்கள் வீட்டிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
அந்த பரபரப்பான சம்பவத்தை படமாக்கியிருக்கிறோம். படம் முழுவதும் எப்போதும் மழை இருந்து கொண்டேயிருக்கும். இதற்காக தினமும் 12 லட்சம் தண்ணீர் வைத்து மழை மற்றும் வெள்ளக் காட்சிகளைப் படமாக்கினோம்.
சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் 6 அடி ஆழத்திற்கு ஒரு வீடு கட்டும் அளவிற்கு பள்ளம் எடுத்து, அதில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு வசதி செய்து, உண்மையாகவே அதனுள் ஒரு வீட்டைக் கட்டினோம்.
அந்த வீடு கட்டுவதற்கு மட்டுமே 50 லட்ச ரூபாய் செலவானது. நான் இயக்கிய முதல் படமான ‘ஆரோகணம்’ படத்தை 36 லட்ச ரூபாயில் எடுத்து முடித்தேன்.
அவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்தினாலும், அதை ஒரு துளி கூட வீணாக்கவில்லை. ரீசைக்ளிங் முறையில்தான் அதைப் பயன்படுத்தினோம்.
இப்படத்தில் கிஷோர், ஸ்ரீரஞ்சனி இருவரும் பாலக்கட்டு ஐயர்கள் பேசும் தமிழைப் பேசி நடித்திருக்கிறார்கள். எங்கள் குடும்பப் பின்னணியும் அதுதான். கிஷோர், ஸ்ரீரஞ்சனி அவ்வளவு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டியது. ஆனால், படத்தைத் தயாரித்துள்ள என் கணவர் ராமகிருஷ்ணன் இந்தப் படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார். தண்ணீரில் இறங்கி நடித்துவிட்டு, பின் மீண்டும் மானிட்டர் வந்து பார்ப்பது கடினமாக இருக்கும் என்ற காரணத்தால்தான் அவர் அப்படி சொன்னார்.
எனது அக்காவும் அந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்தான். அவர் அதில் அனுபவித்த கஷ்டங்களை, விஷயங்களை கதையாக எழுதி ஒரு படத்திற்குத் தேவையான திரைக்கதை அமைத்து இந்த ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை எடுததிருக்கிறேன்.
பிளாஷ்பேக் காட்சிகளில் இளமையான கதாபாத்திரங்களில் பசங்க கிஷோர், லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் காதலும் உண்டு, நெகிழ்வான கணவன் மனைவியின் அன்புப் பிணைப்பும் உண்டு. படத்தைப் பார்த்த பலரும் இந்தப் படத்தை திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள அனுப்புங்கள் என்று சொன்னார்கள்.
ஆனால், எங்களுக்கு இங்கு படத்தை முதலில் ரிலீஸ் செய்யவே விருப்பம். நிச்சயம் இந்தப் படம் அனைவரையும் உணர்ச்சிபூர்வமாக ரசிக்க வைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,” என்றார்.