ரீகல் ரீல்ஸ் பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’.
தர்ஷன், கீர்த்தி பாண்டியன் நாயகன், நாயகியாக நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நாயகி கீர்த்தி பாண்டியன் பேசுகையில்,
“தும்பா எனது அறிமுகப்படம், இது எனது முதல் படமாக அமைந்தது எனது வரம். என் வாழ்க்கையில் நான் எப்படி இருப்பேனோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில்தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன். சிறந்த விதத்தில் VFX காட்சிகளை கொடுக்க, காட்டில் எங்களுடன் பயணித்து கடுமையாக உழைத்தார்கள் ரங்கா மற்றும் வில்லவன் கோதை சார். நடிகர்களான எங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்தார் இயக்குனர் ஹரீஷ்.
என் தோற்றத்தை பற்றிய எந்த விதமான கருத்தும் சொல்லாமல், எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தவர். 3 வருடங்களாக நான் நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறேன். என் தன்னம்பிக்கையை குலைக்கும் விதமான கருத்துக்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் ஹரீஷ் அந்த விதத்தில் எனக்குக் கிடைத்த வரம். உன் நடிப்பை மட்டும் கவனி, நம்பிக்கையோடு நடி என எனக்கு ஊக்கம் தந்தார் ஹரீஷ். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம், ஒரு தூய்மையான பொழுதுபோக்கு படமாக ‘தும்பா’ இருக்கும் என்றார்.
தர்ஷன் பேசும் போது,
“கனா படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு மீடியா, அருண்ராஜா அண்ணன், சிவகார்த்திகேயன் அண்ணன் ஆகியோருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த படத்தில் சி.ஜி. பெரும்பகுதி இருக்கும், அதை நாங்களே கற்பனை செய்துதான் நடிக்க வேண்டும். அதனால் எங்கள் எல்லோருக்கும் 4 நாட்கள் ஒரு ஒர்க்ஷாப் வைத்தார். நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். அதில் இருந்து உடனடியாக நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் ஆனோம். கீர்த்தி ஒரு சிறந்த நடிகை, படப்பிடிப்பில் அவர் நிறைய நம்பிக்கை கொடுப்பார், இந்த படமும் அனைவரும் ரசிக்கும் படமாக அமையும்,” என்றார்.
இயக்குனர் ஹரீஷ் ராம் பேசுகையில்,
“இந்த படத்தின் மூலக்கதை என் நண்பர், இணை இயக்குனர் பிரபாகரன் அவர்களுடையது. இந்தப் படத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க மிக முக்கிய காரணம் ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பும், திட்டமிடலும் தான். சி.ஜி. நிறைந்த படம் என்பதால் படத்தொகுப்பாளரின் வேலை இந்த படத்தில் மிகவும் கடினமானது. இந்த படத்தின் இரண்டு மிக முக்கிய அம்சங்கள் VFX மற்றும் சவுண்ட் டிசைன்.
குழந்தைகள் இந்தப் படத்தை மிகவும் ரசிப்பார்கள். அனிருத், சந்தோஷ் தயாநிதி, விவேக் மெர்வின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்றெல்லாம் கிடையாது. எல்லோருமே முக்கிய கதாபாத்திரங்கள். நாயகி கீர்த்தியின் திறமைதான் அவரை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது,” என்றார் இயக்குனர்.
‘தும்பா’ வரும் ஜுன் 21ம் தேதி வெளியாகிறது.