வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில், பிரதீப் குமார் இசையமைப்பில், அமலா பால், ரம்யா, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ஆடை.
இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில்,
“இக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்கக் கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்பபுக் கொண்டார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அமலா பாலிடம் கதை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அமலா பாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து நடிப்பார். இப்படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றி பேசும் படமாக இருக்காது.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ ? என்று பல தலைப்பு போட்டு எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன்,” என்றார்.
நடிகை அமலா பால் பேசும்போது,
“இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரையில் நீண்ட பயணம் அழகிய பயணமாக இருந்தது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படம் படம். ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால்தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம்.
ஒரு காட்சியில் நடிக்கும்போது நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று கூறினார். பல பேருக்குத் தெரியாது ரத்னகுமாருக்கு ‘ஆடை’ படம் தான் முதல் படம் என்று. அவர் பன்முக திறமை வாய்ந்தவர்.
ரம்யா இனிமேல் தொகுப்பாளினி இல்லை. சினிமாத் துறைக்கு மற்றுமொரு நடிகை கிடைத்துவிட்டார். விவேக் படத்திலும் நிஜத்திலும் எனக்கு சகோதரர் மாதிரி தான்.
முதல் நாள் படப்பிடிப்பில் நான் நினைத்தேன், எனக்கு பாதுகாப்பு இருக்குமா என்று. ஏனென்றால், ஒளிப்பதிவாளர்களையும் சேர்த்து 15 பேர் இருந்தார்கள். ஆனால் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்,” என்றார்.