ஐ.டி. கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்த வெங்கட் ரெட்டி, சந்தீப் சாய் இருவரும் சினிமாத் துறையில் தடம் பதிக்க நினைத்து வேலைகளை விட்டு விலகி ‘யாரோ’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
வெங்கட் ரெட்டி நடிக்க, சந்தீப் சாய் படத்தை இயக்கியிருக்கிறார்.
கதையை பற்றி வெங்கட் ரெட்டி கூறும் போது,
“கதை சொல்லல் என்பது திரைப்படத் தயாரிப்பின் மிகவும் சுவாரசியமான பகுதி என்பதை நான் உணர்கிறேன். நிச்சயமாக நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் ஒரு ஆரோக்கியமான தயாரிப்பை அதிகப்படுத்தி வழங்குகிறார்கள். ஆனால் முடிவில் கதை எவ்வளவு சுவாரசியமானது என்பது பற்றி தான் பேசப்படும்.
சந்தீப் சாய் இந்தக் கதையை விவரிக்கும் போது, நான் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறேன் என்ற எனது அடையாளத்தை உண்மையில் மறந்து, ஒரு ரசிகனாக அதை ரசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டத்தில் நான் இதை பெரிதுபடுத்தி சொல்வது போலத் தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிறைய முக்கியத்துவத்துடன் எழுதிய அவரது திறமை தான், கதையை மிகவும் சுவாரசியப்படுத்தியது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஒரு தயாரிப்பாளராக நான் உற்சாகமாகவும், ஒரு நடிகராக பதட்டமாகவும் இருக்கிறேன். ஏனெனில் சந்தீப் சாய் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நான் கருதுவதால் பதட்டமாக இருக்கிறது,” என்றார்.
இயக்குனர் சந்தீப் சாய் கூறும்போது,
“இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர், கொலை மர்மத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை. ஒரு தனித்துவமான கதை சொல்லலுடன் சிறப்பான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்.
‘யாரோ’ ஒரு தனிமையான நாயகனைப் பற்றியது. தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளில் அவரை சிக்க வைக்க முயல்கிறார்கள். மேலும் யாரென்றே தெரியாத அந்த ஆபத்தான மற்றும் மிகவும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காகவும் நாயகன் மாறுகிறார். கொலைகாரனின் இருப்பு எல்லா இடங்களிலும் உணரப்படுவதால், நாயகன் தன்னைச் சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை அவிழ்க்கும் திறனை பற்றிய மிகப்பெரிய உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
‘யாரோ’ 2019ன் சிறந்த தமிழ் திரைப்படமாக இருக்கும் என நாங்கள் சவால் விடுகிறோம்,” என்கிறார்கள் இரண்டு நண்பர்களும்.