அமோக வரவேற்பில் ‘கைதி’

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன், தீனா, மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் ‘கைதி’.

இப்படத்துடன் வெளிவந்த விஜய் நடித்த ‘பிகில்’ படம் கடும் போட்டியாக அமைந்தாலும் ஒட்டு மொத்த விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டும் படமாக அமைந்துவிட்டது.

நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூலும், இரண்டாம் நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களின் வசூலும் அதிகரித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பால் கூடுதல் தியேட்டர்களில் இப்படத்தை திரையிட்டு வருகிறார்கள்.

மேலும், இப்படம் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியானது. அங்கும் படத்திற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நல்ல வசூல் வேட்டையை ‘கைதி’ பெற்றுள்ளது.

படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் பலர் ஆர்வமாக உள்ளதாகத் தெரிகிறது.

சில விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘கைதி’ பற்றி எதிர்மறையான தகவல்களைப் பரப்பினாலும் அது இந்தப் படத்தை சிறிதும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகி இல்லாத, பாடல்கள் இல்லாத ஒரு திரைப்படம் இந்தக் காலத்தில் இப்படி ஒரு வரவேற்பைப் பெறுவது நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் என நினைக்கும் பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

‘கைதி’ படத்தை வாங்கி, திரையிட்ட அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Read Previous

லாரி ஓட்டுவது எளிதல்ல, ‘கைதி’ பற்றி கார்த்தி

Read Next

கமல்ஹாசன் பிறந்தநாள் – மூன்று நாள் விழா