சோல்ஜர்ஸ் பேக்டரி மற்றும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து புதிய தெலுங்கு – தமிழ் இரு மொழித் திரைப்படத்தைத் தயாரிக்கின்றன.
வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தெலுங்கில் வெளியான ‘MAD’, ‘MAD Square’ படங்களின் மூலம் பிரபலமான ராம் நிதின் கதாநாயகனாக நடிக்க, பிராத்தனா நாதன் மற்றும் தேஜு அஸ்வினி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனம், இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ். சினிஷ் தலைமையில் பல்வேறு கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’, ‘விவாஹ போஜனம்பு’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள இந்நிறுவனம், தற்போது ‘சூப்பர் ஹீரோ’, ‘நின்ஜா’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருகிறது.
சஞ்சன் ஜி. தொடங்கிய ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனம், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’, ‘ஃபேமிலி ட்ரிப்’ உள்ளிட்ட படங்களைத் தயாரிக்கும் இந்நிறுவனம், தற்போது சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்துடன் இணைந்து தெலுங்குத் திரையுலகிலும் தயாரிப்புப் பணியைத் தொடங்குகிறது.
‘பார்க்கிங்’, ‘TTT’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டுப் பெற்ற பிராத்தனா நாதன், தற்போது ‘நின்ஜா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற தேஜு அஸ்வினி, அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 7’ என அழைக்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.