சங்கராபரணம் – மீண்டும் வெளியீடு

கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’ திரைப்படம், அதிநவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு இம்மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பீப்பிள்ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் பைவ் நிறுவனங்கள் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 4K அல்ட்ரா HD காட்சித் தரம் மற்றும் 7.1 சரவுண்ட் ஒலியுடன் இப்படத்தை வெளியிடுகின்றன. இதன் புதிய டிஜிட்டல் பதிப்பை ஸ்ரீலால் தேவராஜ் உருவாக்கியுள்ளார்.

இந்தியப் பாரம்பரிய இசையின் பெருமையையும், ஒரு கலைஞனின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் ஜே.வி. சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே.வி. மகாதேவன் இசையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்றளவும் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ‘சங்கரா…’ பாடல் இந்தியத் திரையிசையின் முக்கியமான இசைப் படைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

வெளியான காலகட்டத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கான தேசிய விருதையும், அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியிடமிருந்து தங்கப் பதக்கத்தையும் பெற்றது. மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையிலும் திரையிடப்பட்டது.

பழைய தலைமுறை ரசிகர்கள் மீண்டும் திரையரங்கில் ரசிப்பதற்கும், இளம் தலைமுறையினர் இப்படத்தின் இசையையும் கதையையும் பெரிய திரையில் அனுபவிப்பதற்கும் வாய்ப்பாக அமையவுள்ளது.

Read Previous

கூடு – ஒரு கிராமம், 35 நாட்கள்…

Read Next

மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் – டிசம்பர் 4 வெளியீடு