சுயாதீன தமிழ் இசைக் கலைஞர் தெருக்குரல் அறிவு, தனது புதிய இசை ஆல்பமான ‘ஹலோ’ (HELLO) மூலம் காதல் கதைக்களத்தில் களமிறங்கியுள்ளார். பிக்சன் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் தெருக்குரல் அறிவு மற்றும் அஸ்வதி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் கூல் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘ஹலோ’ பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். முதல் சந்திப்பு, மெல்ல மலரும் காதல், மனதுக்கு நெருக்கமான ஒருவரைக் கண்டடையும் மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து தெருக்குரல் அறிவு கூறுகையில், “என்னுடைய பல பாடல்கள் சமூகச் சிந்தனைகளையும், வாழ்க்கையின் யதார்த்தங்களையும் பேசியிருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு, அனைவருக்கும் நெருக்கமான எளிமையான காதல் உணர்வுகளை ‘ஹலோ’ பாடல் மூலம் வெளிப்படுத்த விரும்பினேன். சில நேரங்களில் ஒரு சிறிய வணக்கம் கூட அழகான உறவின் தொடக்கமாக மாறிவிடும். காதலில் ஏற்படும் மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்வுகளை இந்தப் பாடல் கொண்டாடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பாடலின் இசைத் தயாரிப்புப் பணிகளை ஹாஸ்பேஸ் (Hashbass) மேற்கொண்டுள்ளார். ஹரி பாடலைப் பதிவு செய்துள்ளார். பாலு தங்கச்சன் மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் பணிகளையும், ஆண்டோ ஃப்ராங்ளின் சவுண்ட் டிசைன் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
விக்ரம் படத்தொகுப்புப் பணிகளையும், கணேஷ் கலர் கிரேடிங் பணிகளையும் கவனித்துள்ளனர். பிபாய் பிளாக் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
அருள் கூல் இயக்கியுள்ள இந்த இசை வீடியோவில் அறிவு மற்றும் அஸ்வதியின் இயல்பான நடிப்புடன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சமூகக் கருத்துகள் நிறைந்த பாடல்கள் மூலம் கவனம் பெற்ற தெருக்குரல் அறிவின் இசைப் பயணத்தில், ‘ஹலோ’ காதல் பின்னணியில் உருவாகியுள்ள மாறுபட்ட முயற்சியாக அமைந்துள்ளது.