தெலுங்கு, இந்தி, பஞ்சாபி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஷெர்ரி அகர்வால், ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.
ட்யூப்லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார்.
1990-களில் இருந்த காதலின் அப்பாவித்தனத்தையும், அந்தக் காலகட்டத்தின் இனிமையான நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் காதல் உணர்வுகளோடு இணைக்கும் மியூசிக்கல் காதல் திரைப்படமாக ‘சைக்கிள் கேப்’ உருவாகியுள்ளது. இசை, காதல் மற்றும் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இரண்டு தலைமுறையினரையும் இணைக்கும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட ஷெர்ரி அகர்வால், ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் தனது நடிப்புப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் அன்புடனும் நட்புடனும் பழகியதாகவும், பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளர் நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி, ஒளிப்பதிவாளர் சாலமன், ஹேமந்த் செல்வராஜ், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இப்படம் பார்வையாளர்களுக்கும் பிடித்தமான படமாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கெனவே தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஷெர்ரி அகர்வால், ‘எந்தவாருகானி’, ‘பெனாமி’ ஆகிய தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், கன்னடத்தில் ‘ஆகர்ஷிதா’, இந்தியில் ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ ஆகிய படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படங்களைத் தொடர்ந்து இணையத் தொடர்களிலும் இசை வீடியோக்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர், சௌபால் தளத்தில் வெளியாகி யூடியூப்பிலும் கிடைக்கும் பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ தொடரிலும் நடித்துள்ளார். டி-சீரிஸ், ஜீ மியூசிக், ரெட் ரிப்பன் மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான பஞ்சாபி மற்றும் இந்தி இசை வீடியோக்களிலும் பங்கேற்றுள்ளார்.