கொரானோ ஊரடங்கில், படப்பிடிப்பு இல்லாததால், சினிமா நடிகர்கள், நடிகைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.
உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், சமையல் செய்யும் வீடியோக்களை நடிகைகள் அதிகம் பகிர்கிறார்கள்.
ஆனால், நடிகை கீர்த்தி பாண்டியன் வித்தியாசமாக விவசாயம் செய்வதில் இறங்கிவிட்டார். தமிழில் கடந்த வருடம் வெளிவந்த ‘தும்பா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர். நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் அருண் பாண்டியனின் மகள்.
ஏற்கெனவே, அவர்களது நிலத்தில் டிராக்டர் ஓட்டியதை கடந்த மாதம் பகிர்ந்தார். இப்போது நாற்று நடுவதை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.
“இதுவரையில் நான் செய்யாத ஒரு மிகச் சிறந்த விஷயத்தை செய்தேன். இந்தக் கலையைக் கற்கிறேன், ஒரு சமயத்தில் ஒரு படி,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடற்பயிற்சி, சமையல் வீடியோக்களைப் பகிரும் நடிகைகளுக்கு மத்தியில் கீர்த்தியின் இந்த விவசாய வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது