10 ஆண்டுகளாக முன்னணியில் த்ரிஷா

  த்ரிஷா திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒருவர் முன்னணியில் இருந்து வருவது சாதாரண விஷயமல்ல.

‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் டிசம்பர் 14, 2002 ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அமீர் இயக்கிய இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு சாதாரண அறிமுக ஹீரோயினாகவே தெரிந்தார் த்ரிஷா.

த்ரிஷா முதன் முதலில் நடிகையாக ஒப்பந்தமான திரைப்படம் ‘லேசா லேசா’. ஆனால் முதலில் வெளிவந்த படம் ‘மௌனம் பேசியதே’. இதற்கடுத்து த்ரிஷா நடித்து, எனக்கு 20 உனக்கு 18, அலை, லேசா லேசா ஆகிய படங்கள் வெளிவந்தன.

2003ல் விக்ரம் ஜோடியாக நடித்து வெளிவந்த ‘சாமி’ திரைப்படம் அவரை ஒரு வெற்றிகரமான ஹீரோயினாக உயர்த்தியது. இந்த படத்தில் அவருடைய நடிப்பும், நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

2004ல் விஜய் ஜோடியாக நடித்து  வெளிவந்த ‘கில்லி’ அவரை புகழின் உச்சத்துக் கொண்டு சென்றது. இந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்தது. விஜய்யுடன் சேர்ந்து ‘அப்படிப் போடு..அப்படிப் போடு…’ என்று ஆட்டம் ஆடியது, மற்ற ஹீரோயின்களிடம் ஒரு ஆட்டத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.

தொடர்ந்து, சூர்யா ஜோடியாக ‘ஆறு’, அஜித் ஜோடியாக ‘ஜி’, மீண்டும் விஜய் ஜோடியாக ‘திருப்பாச்சி’, ஜெயம் ரவி ஜோடியாக ‘உனக்கும் எனக்கும்’ ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் ‘ஜி’ தவிர மற்ற படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

ஆனால் அடுத்து வந்த,  ‘ஆதி’, ‘கிரீடம்’ மாபெரும் வெற்றிப் படங்களாக அமையவில்லை என்றாலும் த்ரிஷாவை திறமை மிக்க நடிகையாக அடையாளம் காட்ட உதவியது.

அடுத்து வந்த ‘ஹீரோயின் ஓரியன்டட்’ மூவியான ‘அபியும் நானும்’ அவருடைய நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது.

தொடர்ந்து வந்த ‘குருவி’, ‘பீமா’, ‘சர்வம்’ , கமல்ஹாசனுடன் முதன் முறையாக நடித்த ‘மன்மதன் அம்பு’ கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் த்ரிஷாவுக்கான இடம் தமிழ் சினிமாவில் அப்படியே நிலைத்து வந்தது.

இந்த படங்களின் வெற்றியைத் தூக்கி நிறுத்துவது போல் ஒரே படத்தில் மீண்டும் ஒரு உச்சத்தைத் தொட்டார். அது, கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நடித்து வெளிவந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. அழகான ‘ஜெஸ்ஸி’ கதாபாத்திரம் காதல் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

2011ல் த்ரிஷா மீண்டும் அஜித்துடன் நடித்து வெளிவந்த ‘மங்காத்தா’ படம் மாபெரும் வெற்றி பெற்றது.

2003ல் ‘நீ மனசு நாக்கு தெலுசு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2004ல் வெளிவந்த ‘வர்ஷம்’ படத்தின் மாபெரும் வெற்றி அவரை தெலுங்கிலும் முன்னணி நடிகையாக்கியது. தொடர்ந்து ‘நீ ஒஸ்தானுன்டே நா ஒத்துன்டானா’ , ‘அத்தடு’, ‘அல்லாரி புல்லொடு’, ‘பெளர்ணமி’, ‘ஸ்டாலின்’, ‘சைனிக்குடு’, ‘ஆடவாரி மாடலுக்கு அர்த்தம் வேறுலே’, ‘கிருஷ்ணா’, ‘புஜ்ஜிகாடு’, ‘கிங்’, ‘சங்கம்’, ‘நமோ வெங்கடேசா’, ‘தீன்மார்’, ‘பாடிகார்ட்’, ‘தம்மு’ போன்ற பல தெலுங்குப் படங்களில் நடித்தார்.

2010ம் ஆண்டு ‘கட்டா மிட்டா’ என்ற படம் மூலம் ஹிந்தித் திரையுலகிற்கும் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

விஷால் ஜோடியாக நடித்து வரும் ‘சமர்’ விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது ஜெயம் ரவி ஜோடியாக ‘பூலோகம்’, ஜீவா ஜோடியாக ‘என்றென்றும் புன்னகை’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இன்னும் பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக இருக்க த்ரிஷாவிற்கு screen4screen.com ன் வாழ்த்துக்கள்.

த்ரிஷா நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் – கேலரி

த்ரிஷா – புகைப்படங்கள் – 1 

த்ரிஷா – புகைப்படங்கள் – 2

Read Previous

ரசிகர்கள் விரும்பும் ‘வசந்தம்’

Read Next

இன்றைய ரிலீஸ்