தயாரிப்பு – திருப்பதி பிரதர்ஸ் மீடியா பி. லிட். – என். சுபாஷ் சந்திரபோஸ்
இயக்கம் – பிரபு சாலமன்
இசை – டி. இமான்
பாடல்கள் – யுகபாரதி
ஒளிப்பதிவு – எம். சுகுமார்
படத்தொகுப்பு – எல்.வி.கே. தாஸ்
கலை – வைரபாலன்
சண்டைப் பயிற்சி – அனல் அரசு
நடிப்பு – விக்ரம் பிரபு (அறிமுகம்), லட்சுமி மேனன், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, ஜுனியர் பாலையா, அஸ்வின் மற்றும் பலர்.
வெளியான தேதி – 14 டிசம்பர் 2012.
கதை
மலையும் மலை சார்ந்த இடத்து ‘குறிஞ்சி’ நிலத்தில், ஒரு யானையால் ஊருக்குள் நடக்கும் பிரச்சனையும், அந்த பிரச்சனையைத் தீர்க்க வந்த ஒருவனால் ஏற்பட்ட ‘காதல்’ பிரச்சனையும்தான் இந்த ‘கும்கி’.
ஆதிகாடு என்ற மலை கிராமத்தில் ஊருக்குள் வந்து மனிதர்கள் சிலரை கொன்று விட்டு, பயிர்களையும் (மலைப் பிரதேசத்துல நெல் பயிரிடுவாங்களா ?) நாசம் செய்து விட்டு செல்வது ‘கொம்பன்’ என ஊர் மக்களால் அழைக்கப்படும் ஒரு யானையின் வழக்கமான வேலை. அப்படிப்பட்ட கொம்பனை விரட்ட ஒரு ‘கும்கி’ யானையை ஏற்பாடு செய்கிறார் ஊர் தலைவர் ஜோ மல்லூரி.
சந்தர்ப்ப சூழ்நிலையால் உண்மையான ‘கும்கி’ யானையால் வராமல் போக, கோயில் திருவிழா, கல்யாணம், காது குத்துக்கு..போற ‘மாணிக்கம்’கற தன் யானையோட அந்த மலை கிராமத்துக்கு போறாரு பாகன் விக்ரம் பிரபு.
அங்க ஊர் தலைவர் பெண்ணான லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் காதல், அந்த காதல் ஜெயிக்குதா, ‘கொம்பனை’, ‘ மாணிக்கம்’ என்ன பண்ணுச்சின்கறதுதான் படத்தோட கதை.
இயக்கம்
வித்தியாசமான பின்னணி, தமிழ் சினிமால இது வரை சொல்லப்படாத கதைன்னு இந்த படத்தை தாராளமா சொல்லலாம். இயக்குனர் பிரபு சாலமன், சொல்ல வந்தற விஷயத்தை தெளிவா சொல்லியிருக்காரு.
அறிமுகங்களை போட்டு படம் இயக்குனர்களுக்கு எப்பவுமே ‘தில்’ அதிகம் வேணும். அது பிரபு சாலமன் கிட்ட இருக்கு. போன படத்துலயும் இருந்தது. இந்த படத்துலயும் இருக்கு.
கிளைமாக்ஸ் மட்டும் ரொம்பவே சோகமாயிடுச்சி. பெரிய ட்விஸ்ட், டர்ன் எதுவும் படத்துல இல்ல..‘கொம்பன்’ எப்ப வருவான்னு ‘அம்புலி’ கதை பார்க்கிற மாதிரியே மட்டும் இருக்கு. அப்பப்ப வந்து ‘கொம்பன்’ பயமுறுத்தவேயில்லை.
நடிப்பு
நாயகன்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்து வாரிசு, நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, ஹீரோவா அறிமுகமாயிருக்கிற படம். முதல் படம்கறதால அதிகமா ‘கமென்ட்’ பண்ணக் கூடாது. குடும்பத்து பேரை காப்பாத்த முயற்சி பண்ணியிருக்காரு.
உயரத்துக்கும், தோற்றத்துக்கும் இவரை சீக்கிரமே ‘ஆக்ஷன் ஹீரோ’ மாத்திடுவாங்க. சில சீன்ஸ்ல, ‘பருத்தி வீரன்’ கார்த்தி ஞாபகத்துக்கு வந்துட்டு போறாரு…அப்பா, தாத்தா, படத்தையே அதிகம் பாருங்க விக்ரம்..அது போதும்..ஆல் தி பெஸ்ட்…
நாயகி
படத்தோட டைட்டில்ல ‘அறிமுகம்’ லட்சுமி மேனன்னுதான் கார்டு வருது. அறிமுகத்துக்கு முன்னாடியே ‘ஹிட்’ படத்துல நடிச்சி பேர் வாங்கிட்டாங்க லட்சுமி.
ஹீரோ கூட அதிகமான காட்சிகள் இல்ல. அப்பப்ப வர்றாங்க, நடக்கறாங்க, போறாங்க, ‘மாணிக்கத்துக்கு’ பழம் கொடுக்கறாங்க. காதலுக்கு சம்மதிச்ச அடுத்த காட்சியிலயே ஹீரோ கூட…ரொம்ப நெருக்கமாயிடறாங்க. நடிப்பை வெளிப்படுத்தறதுக்கு குறைவான வாய்ப்புதான் இயக்குனர் கொடுத்திருக்காரு.
மற்றவர்கள்
படத்தோட கலகலப்புக்கு முக்கிய காரணம் தம்பி ராமையா, சரளமா டயலாக் அடிச்சி, ரசிக்க வச்சிடறாரு. குணச்சித்திரம், நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்திற்கு இப்போதைக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை. கூடவே அஸ்வின் வேற, நல்ல வாய்ப்பை சரியா பயன்படுத்யிருக்காரு.
ஊர் தலைவராக ஜோ மல்லூரி, அந்த ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ், ஜுனியர் பாலையா நல்ல தேர்வு.
‘கும்கி’ கதையில யானையை பத்தி சொல்லாம எப்படி…சின்ன வயசுல ‘தேவர் பிலிம்ஸ்’ படங்கள்ல பார்த்தது…அப்பவே ரசிச்சிருக்கிறோம். இப்ப ரசிக்க மாட்டோமா…‘மாணிக்கம்’ பாகனுக்கு மனமார வாழ்த்துக்கள்.
இசை
இமான் இசையில் அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பவர் யுகபாரதி. ஒன்னும் புரியலை…,ஐயய்யய்யோ ஆனந்தமே…, சொல்லிட்டாளே….அருமையான மெலோடிஸ்…அப்புறமா இவரும் படத்துக்கு படம்…ஒரு சை..சை..இல்ல சொய்..சொய்..னு கண்டு பிடிச்சிட்டாரு..ஆனாலும் ரசிக்க வச்சிருக்கு…
சுகுமார் ஒளிப்பதிவு இயற்கைப் பின்னணியை அழகோ, அழகு என்று சொல்ல வைக்குமளவிற்கு அமைந்திருக்கிறது. குறிப்பாக, அந்த அருவி காட்சி, ஆங்கிலப் படத்தை பார்த்தது போன்ற உணர்வு.
S 4 S Verdict
‘கும்கி’ – எந்த ‘ஹேர் பின்’ திருப்பங்கள் இல்லாத அழகான காதல் கதை.
