மத்திய அரசு ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வருவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று தமிழ்த் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தை, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்காளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இதனால், இன்று ஒரு நாள் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறாது. பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், இந்த போராட்டத்திற்கு இடமளித்து, பாதுகாப்பும் அளித்து ஒத்துழைப்பு தர உறுதியளித்துள்ள தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், போராட்டங்கள் நடத்தி வரும் அனைத்து அமைப்பினருக்கும் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, உறுதியான நிலைப்பாட்டுடன் நடிகர் சங்கம் சார்பாக விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.