நூற்றாண்டு விழாவை கொண்டாடி வரும் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் ‘3டி’ தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு நாளை ஏப்ரல் 5ம் தேதியன்று வெளியாக உள்ளது.
1990ம் ஆண்டு மைக்கேல் கிரிக்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இந்த படத்தை இயக்கினார்.
63 மில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் ஏறக்குறைய 900 மில்லியன் டாலர்களை வசூலித்தது. உலக அளவில் அதிக வசூலை அள்ளித் தந்த படங்களில் 25வது இடத்தில் உள்ளது .
Sound Mixing, Sound Editing, Best Visual Effects ஆகிய துறைகளில் இரு ஆஸ்கர் விருதுகளை இந்த படம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜுராசிக் பார்க் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1997ம் ஆண்டு ‘தி லாஸ்ட் வேர்ல்ட் – ஜுராசிக் பார்க்’ என்ற இரண்டாவது பாகமும், 2001ம் ஆண்டு ‘தி ஜுராசிக் பார்க் 3’ என்ற மூன்றாவது பாகமும் வெளிவந்தன. இதில் இரண்டாவது பாகத்தை மட்டும் ஸ்பீல்பெர்க் இயக்கினார்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான ஜான் ஹேமன்ட் (ரிச்சர்ட் அட்டன்பரோ) ஒரு புதுமை விரும்பி. க்ளோன் முறையில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான டைனோசர்கள் வசிக்கும் ‘ஜுராசிக் பார்க்’ என்ற ஒரு பூங்காவை அறிவியல் ஆராய்ச்சியாளர்களுடன் உருவாக்கியிருக்கிறார்.
எதிர்பாராதவிதமாக டைனோசர் ஒன்றினால் தாக்கப்படும் பூங்கா தொழிலாளி ஒருவர் இறந்து விட , ஜான் நடத்த நினைக்கும் அவருடைய திட்டங்கள் அனைத்திற்குமே தடங்கல்கள் ஏற்படுகின்றன. இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.