தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு ஜுன் 3ம் தேதியிலிருந்து ஜுன் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வி இயக்குனர் கே. தேவராஜன் நேற்று வெளியிட்டார்.
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2013–2014–ம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் 3–ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, தமிழகத்தில் கடுமையான வெப்பநிலை தொடர்வதால், மாணவ–மாணவிகளின் நலன் கருதி, அனைத்து பள்ளிகளும் ஜூன் 3–ந் தேதிக்கு பதிலாக, ஜூன் 10–ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளிகள் ஜுன் 10ம் தேதி திறக்கப்படுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு கொண்டாட்டமாகவும், பெற்றோர்களுக்கு இன்னும் ஒரு வாரம் பிள்ளைகளை சமாளிக்க திண்டாட்டமாகவும் இருக்கும்.