ஆந்திர பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து ‘தெலுங்கானா,’ ‘சீமாந்திரா’ என்ற இரு மாநிலங்கள் இன்னும் சில மாதங்களுக்குள் உருவாக இருக்கின்றன.
ஒரு பக்கம் எதிர்ப்பும், மறு பக்கம் ஆதரவும் கிளம்பி வரும் நிலையில், புதிதாக உருவாக இருக்கும் இரு மாநிலங்களின் முதல்வர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வருவதாகத் தெரிகிறது.
தற்போதைய ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி ராஜினாமா செய்யப் போவதாகக் கூறி வரும் நிலையில், சீமாந்திரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்க, பிரபல தெலுங்கு நடிகரும், தற்போதைய மத்திய அமைச்சருமான சிரஞ்சீவிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
ஏனெனில், ‘கம்மா’, ‘காப்பு’ என்ற இரு ஜாதிகளுக்கிடையேதான் ஆந்திராவில் அடிக்கடி யார் பெரியவர் என்ற மோதல் எழுவது வழக்கம். சிரஞ்சீவி ‘காப்பு’ ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
அது மட்டுமல்ல, கடலோர ஆந்திராவில் இந்த ஜாதி மக்கள்தான் பெரும்பான்மையாக உள்ளார்களாம். தெலுங்கு தேச கட்சியில் அதிகமாக கம்மா இனத்தவர் இருப்பதால் அவர்களுக்கு இதன் மூலம் அழுத்தம் கொடுக்கவும் முடியும் என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறதாம்.
இன்னும் சில நாட்களில் இந்த பிரச்சனைக்கு முடிவு தெரிந்து விடும் என்கிறார்கள்.