யு டிவி மோஷன் பிக்சர்ஸ், தி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்து உருவாக உள்ள படம் ‘புறம்போக்கு’.
‘இயற்கை, ஈ, பேராண்மை’ படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இந்த படத்தை இயக்குகிறார்.
ஆர்யா, விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர மூன்றாவதாக இன்னொரு நாயகனும் நடிக்கப் போகிறார். கதாநாயகியர் தேர்வு நடைபெற்று வருகிறது.
படத்திற்கு இசையமைக்கப்போவது யார் என்பதும் இன்னும் முடிவாகவில்லை.
அது என்ன ‘புறம்போக்கு’ என டைட்டிலா என ஆச்சரியப்படுபவர்களுக்கு டைட்டிலுக்கான காரணத்தைச் சொல்கிறார் இயக்குனர் ஜனநாதன்.
“ “புறம்போக்கு என்பதை கொச்சையாகப் பேசுகிறார்கள். இந்த சொல் பற்றி மேலோட்டமான புரிதல் உள்ளது. ஆனால் புறம்போக்கு என்கிற சொல் ஆழமான வரலாற்று ரீதியான பொருள் கொண்டது. வாழ்வியலின் அடிப்படையிலான கருத்தை உள்ளடக்கியதாகும்.
மக்கள் தேவைக்காக இருந்த, பொதுஇடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல மெல்ல தனியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகிறது. அதைப் பற்றிய பின்னணியை கொண்ட சிந்தனைதான் இப்படம்.
புறம்போக்கு என்று இனியாரும் ஏளனமாக கேலியாகப் பேசவேண்டாம். மலை, பனிச்சிகரங்கள், ஆறு, சர்வதேச கடல்பரப்பு, காற்று, ஒளி, நிலவொளி மட்டுமல்ல எல்லையற்ற அண்டவெளியும் கூட புறம் போக்குதான்.எதுவும் தனியுடை மையல்ல. எல்லாமே பொதுவுடைமைதான்.” என்று புறம்போக் கு பற்றி முற்போக்கு கருத்துகளை கூறுகிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
உலகப் படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர்.ஒளிப்பதிவு ஏகாம்பரம். எடிட்டிங் வி.டி.விஜயன்.
வரும் அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.2014 ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.