சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 28ம் தேதி வெளியான ‘இனம்’ திரைப்படம் பலத்த சர்ச்சையை உருவாக்கியது.
இலங்கையில் நடைபெற்ற இனப்போராட்டத்தை அந்த படம் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்த்து அவரவர் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து படத்திலிருந்து சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கிவதாக படத்தை வெளியிட்டுள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இருந்தாலும் படத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள்தான் அதிகமாகப் பரவியது.
இதைத் தொடர்ந்து சற்று முன்னர், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடமிருந்து முறையான அறிவிப்பு ஒன்று வெளியானது.
அதில் ‘இனம்’ திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்தி நாளை முதல் (31 மார்ச் 2014) முதல் எல்லா திரையரங்குகளிலும் இருந்து வாபஸ் பெறுகிறோம் என தெரிவித்துள்ளார்கள்.
“ஒரு சினிமா நேசனாகவே ‘இனம்’ படத்தை நாங்கள் வாங்கி வெளியிட்டோம். ஆனால், படத்தைப் பற்றிய தவறான தகவல் பரப்பப்பட்டிருக்கிறது. அது சிலரது மனதை புண்படுத்தியிருக்கிறது. அரசியல் ரீதியான குழப்பங்களும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, தேர்தல் நேரத்தில் எந்த குழப்பங்களும் வராமல் இருக்க படத்தை நான் நிறுத்துகிறேன், ” என அந்த அறிக்கையில் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.