‘இனம்’ தந்த சினம்…

inam premier show_00050

‘இனம்’ என்ற ஒரு படத்தை  என்ற ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் எடுத்திருக்கிறார் என்பது சில வாரங்கள் முன் வரை யாருக்குமே தெரியாத ஒன்றாகத்தான் இருந்தது.

அந்த படத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியையும் அவராகக் கூட எந்த மீடியாவிற்கும் கசிய விட்டதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே அப்படி ஒரு படத்தை அவர் இயக்கி வருகிறார் என்ற பேச்சு சில மாதங்களுக்கு முன் எழுந்தது. ஆனால், அதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

காரணம், இதற்கு முன் அவன் இயக்கிய ‘மல்லி, டெரரிஸ்ட்’ போன்ற படங்கள் அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை இங்கு ஏற்படுத்தவில்லை. இன்னும் ஏன், வந்த சுவடு கூடத் தெரியாமல்தான் வந்து போனது.

அப்படியிருக்க, இந்த ‘இனம்’ படத்தை தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடப் போகிறது என்ற உடனேயே அந்த படத்திற்கு முதலில் ஒரு விளம்பரம் கிடைக்க ஆரம்பித்தது. அந்த படத்தைப் பற்றிய எந்த செய்திகளும் முதலில் வெளிவராமல் செய்ததன் மூலம் அது தமிழர் எதிர்ப்புப் படமா அல்லது ஆதரவுப் படமா என்பது கூட வெளியில் தெரியாமல் போனது.

படத்தை முன் கூட்டியே யாருக்கும் திரையிடக் கூடவில்லை. பத்திரிகையாளர்களுக்கு வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் காட்டினார்கள். படம் பார்த்த பல பத்திரிகையாளர்கள் படத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களைத்தான் கொண்டிருந்தார்கள். இனப் போராட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், ஏதோ ஒரு படம் எடுக்கிறேன் என்ற விதத்திலேயே அதன் தரம் இருந்ததென கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

ஆனால், படம் வெளியான 28ம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், படத்தைப் பார்த்ததாலும் சிலரது விமர்சனங்களாலும் கொதித்துப் போய் அவர்களது உணர்வுகளை சமூக வலைத்தளங்கள் மூலம் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்தார்கள். படத்திற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியது.

இதனிடையே ‘பிரிமீயர் ஷோ’ என்ற பெயரில் சில வேண்டப்பட்ட, தமிழகத்தில் தமிழ் ரசிகர்களும், உலகத் தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வரும் சில இயக்குனர்களை அழைத்து, படத்தைப் பற்றி பாராட்டிப் பேசியதையும் செய்தியாக வெளியிட்டார்கள். இதன் மூலம் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், படத்தைப் பாராட்டிப் பேசிய ‘இயக்குனர்களுக்கே’ எதிர்ப்பு உருவானது.

சந்தோஷ் சிவன் அவருக்கிருக்கும் பெயரால் மும்பையிலும் அது போன்றே ஒரு ‘பிரிமீயர் ஷோ’ என்ற பெயரில் லாபி செய்து, அங்குள்ள சில நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் வரவைத்து இந்த படத்தை ஏதோ ஒரு சர்வதேச தரத்திற்கு தயாரான படம் என்ற மாயையை கொடுக்க முயற்சித்தார்.

அதே சமயம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தினர் ‘இனம்’ படத்தின் வெளியீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ‘கருத்துச் சுதந்திரத்தில்’ தலையிடுவது என்று ‘கொதித்துப்’ பேசினார்கள். அப்படியென்றால் முல்லைப் பெரியாறு பிரச்சனையை வைத்து தமிழ்நாட்டில் வெளியிட முடியாமல் போன ‘டேம் 999’ படத்திற்கும், இலங்கைப் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்ட ‘மெட்ராஸ் கபே’ படத்திற்கும் அதே ‘கருத்துச் சுதந்திரத்தை’ பற்றி ஏன் பேசாமல் போனார்கள் என்ற எதிர்ப்பும் எழுந்தது.

அவ்வளவு ஏன் தமிழ்நாட்டில் தமிழர்களாலேயே இயக்கப்பட்ட ‘விஸ்வரூபம், தலைவா’ படங்களுக்கு ‘கருத்துச் சுதந்திரம்’ பற்றி பேசாமல் எங்கே போனார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

இயக்குனர்கள் சங்கத்தில் உள்ள சில உறுப்பினர்களின் எதிர்ப்பால், படத்தை அனைத்து உறுப்பினர்களுக்கும் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். அப்போது தமிழ் உணர்வு கொண்ட பல பேர் படத்தில் ஆட்சேபரகமான காட்சிகள் சில இருக்க, எப்படி இந்த படத்தை வெளியிடுகிறீர்கள், இதற்கு எதற்கு சங்கத்தின் பெயரை பயன்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்ப, உடனடியாக தயாரிப்பு தரப்பிலிருந்து அந்த ஆட்சேபகரமான சில காட்சிகளை நீக்குகிறோம் என படம் வெளியான மறுநாள் 29ம் தேதி தெரிவித்தார்கள்.

இலங்கை இனப் பிரச்சனை என்பது பல காலமாக தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்குள்ளும் உணர்வு பூர்வமாக உள்ள ஒரு விஷயம். இதை அரசியல்வாதிகளே சரியாகக் கையாள முடியாமல் திணறி வரும் வேளையில் இப்படி ஒரு படத்தை தமிழில் எடுத்து திரையிட வேண்டிய அவசியம் என்ன ? அதிலும் இந்த படம் இலங்கையில், சிங்கள மொழியில் வேறு திரையிடப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட இருக்கும் படத்தில் என்ன மாதிரியான காட்சிகள் இருக்கும் ? தமிழர்களுக்கு ஆதரவான காட்சிகளா அல்லது எதிரான காட்சிகளா ?…இதற்கு யார் பதில் சொல்வார்கள்…

தாயை இழந்து, தந்தையை இழந்து, கணவனை இழந்து மனைவியை இழந்து, அண்ணனை இழந்து, அக்காவை இழந்து, தங்கையை இழந்து, தம்பியை இழந்து, பெற்ற மகளை இழந்து, மகனை இழந்து, காலம் காலமாக வாழ்ந்த பூமியை இழந்து, வாழ்வதற்காக எங்கெங்கோ சென்ற தமிழர்களது வருத்தமும், சோகமும் சுக வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எங்கே புரியப் போகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி சென்ற தமிழர்களால்தான் இன்று உலகம் முழுவதும் தமிழ்ப் படங்களுக்கு  நல்ல வரவேற்பும், வியாபார ரீதியாக நல்ல வசூலும் கிடைத்து வருகிறது. அவர்கள் தரும் காசும், பணமும் மட்டும் உங்களுக்கு வேண்டும், அவர்களுடைய உணர்வு, எதிர்ப்பும் வேண்டாமா ?

எப்படியோ மூன்று நாட்கள் காலம் தாழ்த்தினாலும் எதிர்ப்புகளால் நல்ல முடிவை எடுத்துள்ளது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை திரைப்படங்கள் மூலமாக உலகுக்கு எடுத்துச் சொல்கிறோம் என்ற பெயரில், வரலாறு தெரியாமல், முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் தேவையற்ற திரைப்படங்களை எடுக்காதீர்கள்.

உங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, தயவு செய்து உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவே போதும்.

Read Previous

‘இனம்’ படம் நிறுத்தம் – திருப்பதி பிரதர்ஸ் அறிவிப்பு…

Read Next

‘கோச்சடையான்’ – அமிதாப்பச்சன் பாராட்டு…