இசையா ? நடிப்பா ? – தவிக்கும் இசையமைப்பாளர்கள்…

vijay-antony-and-gv-prakashkumarதமிழ் சினிமாவில் ஒருவரே பல வேலைகள் செய்வது வழக்கமான ஒன்றுதான். அப்படி பல வேலைகளைச் செய்து புகழையும், வெற்றியையும் பெற்றவர் டி.ராஜேந்தர் மட்டுமே.

80களில் அவருடைய படங்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. குறிப்பாக பெண்கள் கூட்டம் அலை மோதும். அவரின் ‘ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, மைதிலி என்னை காதலி’ போன்ற படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய படங்கள்.

இயக்கம், இசை, ஒளிப்பதிவு, பாடல்கள் எழுதுவது இவற்றோடு நல்ல நடிகராகவும் வெற்றிக் கொடி நாட்டினார். இவருக்கு முன்  இசையமைப்பாளர்களனா சங்கர் – கணேஷ் இரட்டையர்களில் கணேஷ் 70களில் சில படங்களில் நாயகனாக நடித்தார்.

அதன் பிறகு 90களிலும் 2000லும் இசையமைப்பாளர்களாக இருப்பவர்கள், நடிகர்களாக மாறியதேயில்லை. ஆனால், சமீப காலமாக இசையமைப்பாளர்களான யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி, சித்தார்த் விபின் போன்றோர் நடிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், சித்தார்த் விபின் போன்றோர் கொஞ்சமாக தலை காட்டினார்கள்.

ஆனால்,  விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த ‘நான்’ படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

அதோடு, தற்போது “சலீம், திருடன், இந்தியா – பாகிஸ்தான்’ ஆகிய மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் ‘பென்சில்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையடுத்து அவர் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவருமே விஜய் நடித்த படங்களுக்கு இசையமைத்த பின்னர்தான் நடிகர்களாக மாறியுள்ளார்கள் என்பது அதிசயமான ஒற்றுமை.

விஜய் ஆண்டனி விஜய் நடித்த ‘வேட்டைக்காரன், வேலாயுதம்’ படங்களுக்கு இசையமைத்த பிறகுதான் ஹீரோவாக நடித்தார். ஜி.வி.பிரகாஷ் விஜய் நடித்த ‘தலைவா’ படத்திற்கு இசையமைத்த பிறகுதான் ‘பென்சில்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இசையமைப்பதற்கு தனி கவனமும், மன அமைதியும் இருந்தால் மட்டுமே பெரிதாக சாதிக்க முடியும். இளையராஜா 1000 படத்தைத் தொட்டிருப்பதும், ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கியதும் இசை மீது அவர்களுக்கிருந்த அளவு கடந்த ஆர்வம்தான்.

ஆனால், இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு, இசையோடு நடிப்பிலும் அதிக ஆர்வம் உள்ளது தெரிகிறது.

ஒரு படத்திற்கு இசையைமத்து சம்பாதிப்பதை விட, ஒரே படத்தில் ஹீரோவாக வெற்றி பெற்றால் , பெரிதாக சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் செயல்படுகிறார்களா , அல்லது புகழுக்காக நடிக்கிறார்களா என்பது தெரியவில்லை.

விரைவில் அனிருத்தும், யுவனும்  ஹீரோவாக  அறிமுகமாகப் போகிறார்கள் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம்.

இனி இவர்களிடமிருந்து இனிய இசையை எதிர்பார்ப்பதை விட இம்சிக்காத நடிப்பை எதிர்பார்க்கலாமா ? என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

Read Previous

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – விமர்சனம்

Read Next

தணிக்கைக் குழுவுடன் மோதும் ‘நான் சிகப்பு மனிதன்’…