இயக்குனர் விஜய்யுடன் திருமணமா ? – அமலாபால் அறிக்கை

actress amala paul‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் ‘மைனா’ படத்தின் வெற்றி அவரை முன்னணி நாயகியாக்கியது.

விக்ரமுடன் ‘தெய்வத் திருமகள்’ , விஜய்யுடன்  ‘தாண்டவம்’ ஆகிய படங்களில் நடித்த போது, அந்த படங்களின் இயக்குனர் விஜய்க்கும், அமலா பாலுக்கும் இடையே காதல் உருவானதாக அப்போதே செய்திகள் வெளிவந்தன. வழக்கம் போல, அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று இருவருமே சொன்னார்கள்.

இருந்தாலும் கடந்த வருடம் நடைபெற்ற , விஜய் வீட்டு குடும்ப நிகழ்ச்சியொன்றில் அவர்கள் வீட்டு குடும்பப் பெண்ணாகவே அமலா பால் வலம் வந்தார்.

இரு தினங்களுக்கு முன் விஜய் இயக்கி வரும் ‘சைவம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் அமலா பால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பலரும் விஜய் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார்கள்.

இதனிடையே, இன்று காலை முதல் இயக்குனர் விஜய் – அமலா பால் திருமணம் பற்றி செய்தி கோடம்பாக்கத்தில் வேகமாகப் பரவியது. இன்று மாலை பத்திரிகைகளிலும் அது பற்றிய செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து சற்று முன்னர் அமலா பாலிடமிருந்து பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒன்று வந்தது. அதில் ,

“இயக்குனர் விஜய் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் எங்களது எதிர்கால திட்டங்களைப் பற்றி பத்திரிகை நண்பர்களுக்கு தெரிவிக்கிறேன்.

அதுவரை, பத்திரிகை நண்பர்கள் எங்களது அதிகாரப்பூர்வமான அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், ” என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் இயக்குனர் விஜய் – அமலா பால் இருவருக்குமிடையே காதல் இருப்பது நிஜமாகிறது. பத்திரிகை செய்திகளுக்கு எந்த மறுப்பையும் அமலா பால் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் விஜய், தனது பட வேலைகள் சம்பந்தமாக அமெரிக்கா சென்றுள்ளதாகத் தெரிகிறது. அவர் வந்ததும், இருவரும் சேர்ந்து அவர்களது திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

தணிக்கைக் குழுவுடன் மோதும் ‘நான் சிகப்பு மனிதன்’…

Read Next

காதல் ரகசியங்களை அவிழ்த்துவிடும் பார்த்திபன்…!!