எனக்கு நானேதான் போட்டி – சந்தானம்

santhanam press meetஇன்றைய தலைமுறை நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்து வரும் ஒரே நடிகர் சந்தானம்.

கடந்த சில வருடங்களில் பல படங்கள் இவருடைய நகைச்சுவைக்காகவே வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன. இவருடைய கால்ஷீட்டுக்காக காத்திருந்து படம் எடுப்பதெல்லாம் கூட நடந்து வருகிறது.

புகழின் உச்சியில் இருக்கும் போதே காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படித்தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் தனி கதாநாயகனாக தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார் சந்தானம்.

மே 16ம் தேதி வெளிவர உள்ள அப்படத்திற்காக பத்திரிகையாளர்களை நீ…….ண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தவர் பல கேள்விகளுக்கு பதிலளத்தார். நாம் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இதோ….

நடிச்சால் ஹீரோவா மட்டுமே நடிப்பன்னு வெளிய ஒரு பேச்சு இருக்கே…..

“நடிக்கிறத நான் ஒரு வேலையாதான் பார்த்துட்டிருக்கேன். டிவி ஷோவுல இருந்து ஒரு காமெடியனா சினிமாவுக்கு வந்தேன். அப்புறமா ஒரு புரொடக்ஷன் கம்பெனிய ஆரம்பிச்சேன். அதோட ஹீரோவாவும் நடிச்சேன். அதுக்கப்புறமா இப்பவும் காமெடியனா பண்ணிட்டிருக்கேன்.

நாளைக்கு டைரக்ஷன் கூட பண்ணுவேன். எனக்கு என்னன்னா சினிமாவுல ஏதாச்சும் ஒரு வேலை பண்ணிட்டிருக்கணும். அதை திருப்தியா பண்ணணும். மத்தபடி, இப்படித்தான் இருப்பன், அப்படித்தான் இருப்பன்னு யோசிச்சதே இல்லை”.

உங்களுடைய சக போட்டியாளரா யாரை நினைக்கறீங்க ….

“எனக்கு போட்டின்னு யாரையுமே சொல்ல முடியாது. நான் என்னைக்கு ‘ஓபி’ அடிக்கிறனோ அன்னைக்கு என்னை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. நான் நல்லா உழைச்சால் என்னைக்கும் நான்தான் நம்பர் 1. இது எல்லாருடைய வாழ்க்கையிலயும் நடக்கும்.

யாரும் யாரையுமே போட்டியா எடுத்துக்க முடியாது. நான் என்னைக்கு யோசிக்கிறது போதும்னு நினைக்கிறேனோ, அன்னைக்கு நான் காலி. இல்ல, இன்னும் பத்தலைன்னு நினைச்சன்னா, ஜெயிச்சிக்கிட்டேயிருப்பேன், எனக்கு போட்டி நான் மட்டும்தான்,” என்றார் சந்தானம்.

தன்னைப் பற்றியும், சினிமாவில் தனது நிலையைப் பற்றியும் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார் சந்தானம். அதனால்தான், தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களில் அவரால் நடிக்க முடிகிறது போல…

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் அவருக்கு ‘ஃபுல்’லான, அதாங்க முழுமையான வெற்றி கிடைக்க வாழ்த்துவோம்…

 

Read Previous

ரஜினியும் ‘ட்விட்டர்’-க்குள் வந்தார்….

Read Next

நல்ல படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை – தேசிய விருது தயாரிப்பாளரின் வருத்தம்