அஜித், மானு நடித்த ‘காதல் மன்னன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சரண் தொடர்ந்து ‘அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜேஜே, வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம்,’ ஆகிய வெற்றிப் படங்கள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய படம் ‘அசல்’. அஜித், பாவனா, சமீரா ரெட்டி நடித்த அந்தப் படம் 2010ல் வெளிவந்தது.
நான்கு வருடங்கள் கழித்து சரண் தற்போது ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் வினய் நாயகனாக நடிக்க, சாமுத்திரிகா, ஸ்வஸ்திகா, கேஷா கம்பட்டி என மூன்று ஹீரோயின்களை அறிமுகம் செய்கிறார் சரண்.
இவர்களில் சாமுத்திரிகா டேராடூனைச் சேர்ந்தவர். இந்தப் படத்தில் திருநெல்வேலிப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு, இந்தியில் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்வஸ்திகா கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். கேஷா கம்பட்டி மும்பையைச் சேர்ந்தவர். தெலுங்கில் நடித்து விட்டு தற்போது இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்கள் இருவருமே வினய்க்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.
சரணின் ஆஸ்தான இசையைமைப்பாளரான பரத்வாஜின் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
விரைவில் இசை வெளியீடு நடைபெற உள்ளது.