‘ஐ’ இசை விழா – முழு தொகுப்பு….

I - Audio Launch - Gallery_00001

  • ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கபிலன், கார்க்கி பாடல் வரிகளில் தயாரான ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 15, 2014) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
  • ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்கவாஸ்நேகர் இந்த இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்து கொண்டனர்.
  • படத்தின் இசையை ரஜினிகாந்தும், புனித் ராஜ்குமாரும் வெளியிட்டனர். இந்த விழா நிகழ்ச்சி பற்றி சில துளிகள்…
  • மாலை 5 மணிக்கு நாம் அரங்கினுள் நுழைந்த போது பாதிக்கும் மேல் அரங்கம் நிரம்பி வழிந்தது. அதன் பின் 6 மணியை நெருங்க நெருங்கத்தான் அரங்கினுள் நிறைய கூட்டம் காணப்பட்டது.
  • பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து யார் வருகிறார்கள் என்பதை சரியாகக் கூடப் பார்க்க முடியவில்லை. அரங்கினுள் அமைக்கப்பட்ட திரையுலும் வருபவர்களைப் பற்றிக் காட்டவில்லை.
  • விஐபிக்கள் அமரும் பகுதி நிரம்பி வழிந்தது. பலர் உட்கார நாற்காலி கிடைக்காமல் தவித்தனர். நடிகர் சிபிராஜ் மாறி மாறி உட்கார வைக்கப்பட்டார்.
  • பவர் ஸ்டார் சீனிவாசன் வந்த போது அரங்கமே ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது.
  • லதா ரஜினிகாந்த்  அவருடைய இரண்டு மகள்களுடன் அரங்கிற்குள் நுழைந்தார். ரஜினிகாந்த் வந்தாலும் அரங்கினுள் நுழையாமல் பின் பக்கம் சென்று விட்டார். அதன் பின் 7.30 மணிக்குத்தான் அரங்கினுள் முதல் சிறப்பு விருந்தினராக நுழைந்தார்.
  • ரஜினி வந்ததுமே அவருடைய சில ‘பன்ச்’ டயலாக்குகள் ஒலிபெருக்கிகளில் ஒலிக்க ஆரம்பித்தது. இடையில் ரஜினி உட்கார்ந்திருந்த இடத்திற்கு தேடி வந்து அவருக்கு கை குலுக்கிவிட்டுச் சென்றார் பவர் ஸ்டார்.
  • ரஜினிகாந்தைத் தொடர்ந்து கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் வந்தார்.
  • ஷங்கர் மேடையேறி வந்த போது ரஜினிகாந்த் எழுந்து நின்று ஷங்கரை கை கொடுத்து வாழ்த்தினார்.
  • சரியாக 7.55 மணிக்கு ஆர்னால்ட் ஸ்கவாஸ்னேகர் பலத்த கரவொலிகளுக்கு நடுவில் அரங்கிற்குள் நுழைந்தார். ரஜினிகாந்த், ஷங்கர் அவரை எழுந்து நின்று வரவேற்றனர்.
  • 8 மணிக்கு மேல்தான் விழா ஆரம்பமானது. ‘ஜிகர்தண்டா‘ புகழ் பாபி சிம்ஹாவும், பின்னணிப் பாடகி சின்மயி ஆகியோர் விழாவைத் தொகுத்து வழங்கினர்.
  •  ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான ஸ்ரீதர் வரவேற்புரை நிகழ்த்தினார். அப்போது படத்தின் இசையைமப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் வந்தார். ரசிகர்கள் அவரைக் கைத்தட்டி வரவேற்றனர்.
  • தெலுங்கு நடிகர் ராணா டகுபதி விழாவுக்கு வந்திருப்பதாக இரண்டு மூன்று முறை சிம்ஹாவும், சின்மயியும் பேரைப் பேசினார்கள். ஆனால், அவர் விழாவுக்கே வரவில்லை. பின்னர் பேசிய விக்ரமும் அவருடைய பேச்சில் ராணாவை வரவேற்றுப் பேசினார். அவர் வராததைப் பற்றி யாருமே அறிந்து கொள்ளவில்லை போலும்.
  • ‘ I ‘  ஆங்கில எழுத்து வடிவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஒரு புறம் விழா மேடைய இருக்க அதற்கு எதிர்ப்புறம் நாற்காலிகள் போடப்பட்டு அதில் ரஜினிகாந்த், ஷங்கர், ஆர்னால்ட், ஏ.ஆர்.ரகுமான், புனித் ராஜ்குமார் உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள்.
  • 8.10 மணிக்கு விக்ரம் பற்றிய ஒரு தொகுப்பு வீடியோ திரையிடப்பட்டது.  அதைத் தொடர்ந்து விக்ரம் மேடையேறுவார் என்றார்கள். ஆனால், சிறு கோளாறு காரணமாக அது நடக்காமல் போனது.
  • பின்னர், அனிருத்தைப் பாட அழைத்தார்கள். ‘மெர்சலாயிட்டேன்’ என்ற பாடலை அனிருத் பாடினார்.
  • “ரகுமான் இசையில் பாட வேண்டும் என்ற போது பயமாக இருந்தது, அதன் பின் ஜாலியாகப் பாடி முடித்தேன். அவர் என்னை அவருடைய மகன் போல பார்த்துக் கொண்டார். பெருமையாக இருந்தது, ” என்றார் அனிருத்.
  • விழாவுக்கு வந்திருந்த விக்ரம் அம்மாவிடம் விக்ரமைப் பற்றிக் கேட்டார் சின்மயி. “என்னை விட யாரு பெருமைபடப் போறாங்க, ” என்றார் விக்ரமின் அம்மா.
  • அப்படியே சின்மயி, ஆர்னால்ட்டிடம் வந்து சென்னை வருகையைப் பற்றிக் கேட்டார். “ரசிகர்கள் இல்லாமல் நாங்கள் வெற்றி பெற முடியாது. இப்படிப்பட்ட திறமைசாலிகளுடன் இங்கு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.
  • “ஒவ்வொரு படத்தையும் முதல் படம் மாதிரிதான் ஃபீல் பண்ணுவேன். இந்தப் படம் ரொம்ப புதுசா இருக்கும்,” என்றார் ஏ.ஆர். ரகுமான்.
  • “ரஜினி சார், ஏ.ஆர்.ரகுமான், ஆர்னால்ட் இவர்கள் உள்ள மேடையில் இருப்பது எனக்கு மிகவும் மரியாதை. இந்த டீமுக்கு என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.
  • அடுத்து, ஹரிச்சரண், நடாலியா டி லுசியா இருவரும் ‘ஐலா…ஐலா…’ என்ற பாடலைப் பாடினர். ஹைபிட்ச்சில் பாடி நடாலியா அசத்தினார்.
  • மேடையில் விக்ரம் தோன்றுவது தாமதப்பட்டது சரி செய்யப்பட்டு, ஒரு சிம்மாசனத்தில் ‘ஓநாய் மனிதனாக’ அமர்ந்து கொண்டு ஒரு அதிர்ச்சியான தோற்றத்தில் விக்ரம் வெளிப்பட்டார். கீழே ஒரு கூண்டுக்குள் எமி ஜாக்சன் அடைக்கப்பட்டிருந்தார். “என்னோடு நீ இருந்தால்…’ என்ற பாடலுக்கு அவர்களுடைய அற்புதமான தோற்றமும் நடனமும் ரசிகர்களை மட்டுமல்ல, ஆர்னால்ட்டையும் ஆச்சரியப்படுத்தியது.
  • விழாவின் ஹைலைட்டாக அமைந்தது அந்த தோற்றமும், நடனமும்தான். பாடலை ரசித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், அதைப் பார்த்து பிரமித்து ஷங்கரின் தோள் தட்டிப் பாராட்டினார். பாடல் முடிந்ததும் ஆர்னால்ட்டும், ரஜினிகாந்தும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.
  • பாடல் முடிந்து எமி ஜாக்சன் பேசும் போது, “ரொம்ப சந்தோஷமா இருக்கு” எனத் தமிழில் பேசினார்.
  • விக்ரம், “ஆர்னால்ட்டையும், ரஜினிகாந்தையும் வரவேற்றுப் பேசினார். ஆர்னால்ட் சார், உங்களுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்காங்க. இந்த பாடலை மேடையில திரும்ப கொண்டு வர்றதுக்காக 4 மணில இருந்தே மேக்கப் போட ஆரம்பிச்சோம். எமி 3 மணில இருந்து மேக்கப் போட ஆரம்பிச்சாங்க , ’’ என்றார்.
  • விக்ரமின் ஓநாய் மனிதன் தோற்றத்தையும் படத்தின் பல சிறப்புத் தோற்றங்களையும் உருவாக்கிய நியூசிலாந்தைச் சேர்ந்த வீடா நிறுவனம் சார்பாக, ஷான் பேசினார். தொடர்ந்து வீடா நிறுவனம் பற்றி தொகுப்பு வீடியோ திரையிடப்பட்டது.
  • அடுத்து, ஹரிச்சரண், ’பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…’ என்ற பாடலைப் பாடினார்.
  • ஆர்னால்ட்டின் ‘பாடி பில்டிங்’ உடலமைப்புத்தான் அவருக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அதனால், அவரை அசத்தும் விதத்தில் மேடையில் பத்துக்கும் மேற்பட்டக் ஆணழகர்கள் கலந்து கொண்ட ‘பாடி பில்டிங்’ ஷோ நடைபெற்றது. ஆர்னால்ட் அதை வெகுவாக ரசித்தார்.
  • அவரை நோக்கிச் சென்ற அனைத்து ‘பாடி பில்டிங்’ அழகர்களையும் கை கொடுத்து வாழ்த்தினார். பின்னர் அவர்களுடனே மேடையேறினார். “அருமையான ஷோ இது, என்னுடைய இளம் வயதிற்கு நான் சென்றது போல் இருந்தது,” என்றார்.
  • அப்படியே மைக்கைப் பிடித்து திடீரென பேசவும் ஆரம்பித்து விட்டார். ‘ஐ படம் பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசியவர், ஷங்கர் இயக்கும் படத்தில்  நான்  நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.
  • அவர்  பேசிவிட்டுச் சென்றதும் 9.25 மணிக்கு படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. புனித் ராஜ்குமார், ரஜினிகாந்த் ‘ஐ’ படத்தின் இசையை வெளியிட்டனர். இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர்கள் கபிலன், கார்க்கி, ஆஸ்கர் பிலிம்ஸ் இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோரும் அப்போது மேடையில் உடனிருந்தனர்.
  • ஆனால், இசை வெளியீட்டின் போது படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி எமி ஜாக்சனும் மேடையில் இல்லை.
  • தொடர்ந்து படத்தின் டீஸர் திரையிடப்பட்டது. அடுத்து ‘ஐ’ உருவான விதம் பற்றிய கொஞ்சம் விரிவான, அசத்தலான, ஆச்சரியமான வீடியோ தொகுப்பு காட்டப்பட்டது. அதைப் பார்க்கும் போது ஆங்கிலப் படங்களுக்கு இணையாக என்று சொல்ல இந்தப் படம் தகுதியானது என்று சொல்ல வைத்தது.
  • அதன் பின் ஏ.ஆர்.ரகுமான், “என்னோடு நீ இருந்தால்…’ என்ற காதல் பாடலை பியானாவில் இசைக்க உணர்வுபூர்வமாக அந்தப் பாடல் பாடப்பட்டது.
  • பாடலை முடித்துப் பேசிய ரகுமான் “இந்த படத்துக்காக இரண்டு வருஷமா மியூசிக் போட்டுக்கிட்டிருக்கேன். 2 மாசம் முன்னாடிதான் பாடலுக்கான மாஸ்டரையே கொடுத்தேன். நிறைய விஷயங்கள் படத்துல பண்ணியிருக்கோம்,” என்றார்.
  • அடுத்து ரகுமான் மற்றும் அவரது குழுவினர்கள் பாடிய “ரகுமான் மெட்லி” பாடப்பட்டது…“ஊர்வசி…., ஒட்டகத்தை…., பேட்ட ராப்…, மாயா மச்சீந்திரா…., ஷக்கலக்க பேபி…., பால் போலே…., கொலம்பஸ்…, அதிரடிக் காலம்…., இரும்பிலே….” ஆகிய ரகுமான் – ஷங்கர் கூட்டணியின் சூப்ர் ஹிட் பாடல்கள் மிக்ஸாக பாடப்பட்டன.
  • 10 மணிக்கு சீன நாட்டுக் கலைஞர் ஆனா யங்-கின் ‘கஸாலியன் பபுள் ஷோ’ நிகழ்ச்சி, சோப் வாட்டரில் பபுளை உருவாக்கி அதன் மூலம் ஒரு கலையை வெளிக்காட்டினார்.
  • அடுத்ததாக விக்ரம், ‘ஓநாய் மனிதன்’ மேக்கப்பை கலைத்து விட்டு கோட் – சூட் அணிந்து கொண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து சிவப்பு நிற உடையில் எமி ஜாக்சனும் வந்தார். இருவரும் அழகான ‘ரேம்ப் ஷோ’ ஒன்றை நடத்திக் காட்டினர்.
  • ரஜினிகாந்த் பேசும் போது, “ஐ’ படத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொள்வது போல் உள்ளது. படத்தை எப்போது பார்ப்பேன் என்ற ஏக்கம் வந்துவிட்டது. ஷங்கர் இந்திய சினிமாவை ஹாலிவுட்டுக்கு நிகராக கொண்டு செல்வதற்காக செயல்பட்டு வருகிறார். ‘ஐ’ படம் சீயான் விக்ரமை ‘ஐ’ விக்ரமாக மாற்றிவிட்டது. தமிழ் சினிமாவிலும் ஹாலிவுட்டிலும் விக்ரமைப் போன்ற ஒரு நடிகர் இல்லை,” என்று மனம் திறந்து பாராட்டினார்.
  • கடைசியாக இயக்குனர் ஷங்கர் மேடையில் நன்றி தெரிவித்துப் பேசினார். இந்தப் படத்திற்காக விக்ரம் மிகவும் கடுமையாக உழைத்தார் என்றார். அவடைய எண்ணமும், இதயமும் ‘ஐ’ படத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தது என்று பாராட்டினார்.
  • விழா நிறைவடையும் போது மணி 11 ஐ நெருங்கிவிட்டிருந்தது.
  • வெளியில் வந்தார் சென்னையில் சரியான மழை…காலை முதலே ‘சென்னையில் ஆர்னால்ட்’ என்று கேட்டுக் கேட்டு…உள்ளே ‘ஐ’ இசை மழையில் நனைந்த நாம், நள்ளிரவு நேரத்தில்  சரியான மழையில் நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தோம்.

Read Previous

வானவராயன் வல்லவராயன் – விமர்சனம்

Read Next

‘ஐ’ டீசர் – 24 மணி நேரத்தில் 20 லட்சம் ஹிட்ஸ்…