இப்போதெல்லாம் யு டியூப் ஹிட்ஸ் என்பது ஒரு படத்தின் டீசர் வெளியிடப்பட்டவுடன் பேசப்படும் பெரிய விஷயமாகி விட்டது. டீசருக்கு மட்டும் இருந்தால் கூட பரவாயில்லை, படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ என்ற ஒன்றை வெளியிட்டு, அது கூட இவ்வளவு ஹிட்ஸ் வாங்கி விட்டது என பல வழிகளிலும் படத்தை விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் இதுவரை வந்த படங்களை விட தற்போது அதிக பட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக ‘ஐ’ படம் அமைந்துவிட்டது. ‘எந்திரன், நண்பன்’ போன்ற படங்கள் வெளிவந்த போது கூட இணையதளங்களின் தாக்கமும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் படத்தைப் பற்றிக் குறிப்பிடுவதும் அதிகமாக இருந்ததில்லை. கடந்த வருடத்திலிருந்துதான் இது அதிகமாகிவிட்டது.
இரண்டு நாட்களுக்கு முன் 15ம் தேதி இரவு யு டியூபில் வெளியிடப்பட்ட ‘ஐ’ படத்தின் டீசர் 24 மணி நேரத்திற்குள் அதாவது நேற்று 16ம் தேதி இரவுக்குள் 20 லட்சம் பார்வையாளர்களைத் தொட்டுவிட்டது.
இது கடந்த ஆண்டு வெளிவந்த ‘கோச்சடையான்’ படத்தின் டீசர் புரிந்த சாதனையை விட இரு மடங்கு அதிகமான ஒன்று. 2013ம் ஆண்டில் செப்டம்பர் 9ம் தேதி இரவு யு டியூபில் அதன் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் அந்த டீசரைப் பார்வையிட்டதே இதுவரையிலான மிகப் பெரிய சாதனையாக இருந்தது.
தற்போது ‘ஐ’ படத்தின் டீசர் அந்த சாதனையை முறிடித்து விட்டது. இந்தச் செய்தி வெளியிடும் வரை ‘ஐ’ படத்தின் டீசரைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவிலான வரவேற்பு கிடைத்திருப்பது மிகப் பெரிய சாதனை…