‘கத்தி’ படம் ஆரம்பமானதிலிருந்தே அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுபாஷ்கரன் அல்லிராஜாவைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன. அவருக்கும் ராஜபக்ஷேவுக்கும் இடையே வியாபாரத் தொடர்பு இருப்பதாகவும், அதனால் ‘கத்தி’ படத்தின் வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பல தமிழ் அமைப்புகள் தெரிவித்து வந்தன.
சில வாரங்களுக்கு முன் ‘புலிப் பார்வை’ படத்தில் பாலச்சந்திரனை போராளியாகச் சித்தரிப்பதாக அந்தப் படத்தின் இசை வெளியீட்டின் போது பிரச்சனை எழுந்த நிலையில், அதோடு சேர்த்து ‘கத்தி’ படத்திற்கும் மீண்டும் பலமான எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு படங்களுக்கும் எதிரான நிலையில் தமிழ் அமைப்புகள் இருந்து வந்தன. அதன் பின் ‘புலிப் பார்வை’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சம்மதித்துவிட்டது.
‘கத்தி’ படத்தின் நிலை என்ன என்பது மட்டும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளரான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரன் அல்லி ராஜா நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவருடைய நிலையை எடுத்துரைத்தார்.
“எங்களுக்கும் ராஜபக்ஷேவுக்கும் எந்த விதமான வியாபாரத் தொடர்பும் இல்லை. எங்களது நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்கே சிலர் திட்டமிட்டு சதி செய்து வருகிறார்கள். எங்களைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். இணையங்களில் வந்த பல புகைப்பட ஆதாரங்கள் கிராபிக்ஸ் செய்து மாற்றப்பட்டிருக்கிறது. அதோடு, எங்களது அறக்கட்டளை மூலம் நடத்திய சில தொண்டுச் செயல்களில் ராஜபக்ஷே மகன் இருந்ததால் அவருடன் எங்களை இணைத்து செய்தியைப் பரப்பினார்கள்.
எங்களது ஞானம் அறக்கட்டளை மூலம் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பல மறுவாழ்வு விஷயங்களைச் செய்து வருகிறோம். அது மட்டுமல்ல இந்தியாவிலும், உலக அளவிலும் இப்படி பல தொண்டு விஷயங்களில் அக்கறை செலுத்தி வருகிறோம்.
இதற்கு முன்பு ‘ஞானம் புரொக்ஷன்ஸ்’ என்ற பெயரில் கரு.பழனியப்பன் இயக்கிய ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தை சில வருடங்களுக்கு முன்பு தயாரித்து வெளியிட்டோம். தற்போது அந்தப் பெயரைத்தான் லைகா புரொடக்ஷன்ஸ் என்று மாற்றியிருக்கிறோம். எங்களது தாய்மொழியான தமிழில் பல படங்களைத் தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்ற ஆவலில்தான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் துறையில் இறங்கினோம். ஹிந்தியிலும் படங்களைத் தயாரிக்க இருக்கிறோம்.
‘கத்தி’ படத்தின் தயாரிப்புச் செலவு எங்களது நிறுவனத்தின் இரண்டு நாள் வருமானம்தான். எங்களது ‘கத்தி’ படப்பிரச்சனை குறித்து முதல்வரைச் சந்தித்து பேசும் எண்ணமும் இல்லை. அவருக்கு இருக்கும் பல வேலைகளில் ஒரு திரைப்படத்தின் பிரச்சனைக்காகச் சந்திப்பது நன்றாக இருக்காது. அதோடு எந்த திரைப்பட சங்கங்களையும் சந்தித்து ஆதரவு வேண்டும் என்று இதுவரை கேட்கவில்லை. எங்களுக்கு உங்களுக்கு ஆதரவு இருந்தால் போதும்.
படத்தை வேறு நிறுவனத்தின் பெயரில் மாற்றி வெளியிட வேண்டும் என்பதில் எல்லாம் உண்மையில்லை. ‘கத்தி’ படத்திற்கு எதிர்ப்பு தெரிக்கும் தமிழ் அமைப்புகளையும் சந்தித்துப் பேசி எங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல உள்ளோம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ‘கத்தி’ படத்தை வெளியீடு நடக்கும்,” என்று சுபாஷ்கரன் அல்லிராஜா தெரிவித்தார்.
‘கத்தி’ படத்தின் இசை வெளியீடு நாளை சென்னையில் நடைபெற உள்ளது.